அதிர்ஷ்டத்தோட உங்கள தெறிக்கவிட வந்துருக்கோம் – நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோச் எச்சரிக்கை

Advertisement

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பம் முதலே எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறிய இந்த தொடரில் 2 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் வெஸ்ட் இண்டீஸ் முதல் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சியை கொடுத்த நிலையில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் கோப்பையை தக்க வைக்காமல் வெளியேறி ஏமாற்றத்தை சந்தித்தது. அதை விட கையில் வைத்திருந்த அரை இறுதி வாய்ப்பை கத்துக்குட்டி நெதர்லாந்திடம் தோற்று கோட்டை விட்ட தென்னாபிரிக்கா அனைவரும் அதிரும் வகையில் வெளியேறியது.

ஆனால் இந்தியா மற்றும் ஜிம்பாப்வேவிடம் அடுத்தடுத்து தோற்றதால் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்கா வெளியேறிய அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி யாருமே எதிர்பாராத வகையில் அரை இறுதிக்கு தகுதி பெற்று ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. பொதுவாகவே ஒருநாள் கத்துக்குட்டியிடம் மோசமாக தோற்கும் பாகிஸ்தான் மற்றொரு நாள் தன்னை விட மும்மடங்கு வலுவான அணியை அசால்டாக தோற்கடிக்கும் ஆச்சர்யமான அணியாக இருந்து வருகிறது. அந்த வகையில் இம்முறை அதிர்ஷ்டமாக கிடைத்த வாய்ப்பில் அரை இறுதியில் அபாரமாக செயல்பட்டு கோப்பையை வெல்ல பாகிஸ்தான் தயாராகி வருகிறது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக 1992இல் இதே ஆஸ்திரேலிய மண்ணில் ஆரம்பத்தில் தடுமாறினாலும் அதன்பின் கொதித்தெழுந்து அடுத்தடுத்த வெற்றிகளுடன் இம்ரான் கான் தலைமையில் கோப்பையை வென்று படைத்த சரித்திரத்தை இம்முறை பாபர் அசாம் தலைமையில் படைக்க அந்த அணி ஆயத்தமாகி வருகிறது. அந்த வகையில் நவம்பர் 9ஆம் தேதியன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் வலுவான நியூசிலாந்தை எதிர்கொள்ளும் பாகிஸ்தான அணியினர் அதற்காக தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தெறிக்கவிட போறோம்:
இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் நாங்கள் அதிர்ஷ்டத்துடன் அரையிறுதி சுற்றுக்கு வந்ததாக நினைக்க வேண்டாம் என்று பாகிஸ்தான் பயிற்சியாளர் மற்றும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மேத்யூ ஹெய்டன் கூறியுள்ளார். மேலும் நாக் அவுட் சுற்றில் இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் வகையில் செயல்படுவோம் என்று பாகிஸ்தான் வீரர்களுக்கு மத்தியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆரம்பத்தில் வேறு விதமான முடிவாக இருக்கும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் உள்நோக்குத்துடன் சுட ஆரம்பித்து அதன் பற்களை வெளிப்படுத்த தொடங்கும் தருணம் அவை அனைத்தையும் மாற்றுகின்றன. தற்போது பாகிஸ்தான் உண்மையான அச்சுறுத்தலை கொடுக்கும் அணியாக மாறியுள்ளது. இப்போது இந்த உலகில் குறிப்பாக இந்த தொடரில் இருக்கும் அணிகள் யாரும் எங்களை எதிர்கொள்ள விரும்ப மாட்டார்கள். அதிலும் அவர்கள் (எதிரணி) நாங்கள் ஒழிந்து விட்டதாக நினைத்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் எங்களை அகற்றப் போவதில்லை”

“ஒருவேளை நெதர்லாந்து இல்லை என்றால் நாங்கள் இங்கே இல்லை என்று கூறினாலும் தற்போது நாங்கள் இங்கே இருக்கிறோம் என்பதே மிகப்பெரிய சக்தி வாய்ந்தது. ஏனெனில் யாரும் இங்கே எங்களை எதிர்கொள்ள விரும்புவதில்லை. அது தான் எங்களுக்கு கிடைத்துள்ள ஆச்சரியத்தின் அம்சமாகும்” என்று கூறினார். அதாவது காயம்பட்ட சிங்கத்தின் கர்ஜனை அதிகமாக இருக்கும் என்று சொல்வது போல் கதை முடிந்ததாக கருதி தங்களை கிண்டலும் விமர்சனங்களும் செய்தவர்களுக்கு அடுத்து வரும் போட்டிகளில் பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும் என்று மேத்யூ ஹிட்டன் வெறித்தனமாக பேசியுள்ளார்.

அதிலும் குறிப்பாக நெதர்லாந்து உதவியுடன் நாக் அவுட் சுற்றில் இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து என எந்த அணி எதிரே வந்தாலும் அடித்து நொறுக்கி கோப்பை வெல்லும் அளவுக்கு இனிமேல் தான் தங்களுடைய செயல்பாடுகள் அனலாக இருக்கப் போவதாக அவர் எதிரணிகளுக்கு மறைமுகமான எச்சரிக்கையும் எடுத்துள்ளார். இதனால் நியூசிலாந்தை தோற்கடித்த பைனலில் இந்தியாவையும் சாய்த்து தங்களது அணி கோப்பையை வெல்லும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

Advertisement