- Advertisement -
உலக கிரிக்கெட்

வெறும் 107 சேசிங்கில் 50/5 என திணறல்.. மிரட்டிய அயர்லாந்து.. டேபிள் அவமானத்தை தவிர்த்து வீட்டுக்கு கிளம்பிய பாகிஸ்தான்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் ஜூன் 16ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் 36வது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ஏற்கனவே வெளியேறிய பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து கிரிக்கெட் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அயர்லாந்து 20 ஓவரில் போராடி 106/9 ரன்கள் எடுத்தது.

சொல்லப்போனால் ஆண்டி பால்பரின் 0, கேப்டன் பால் ஸ்டெர்லிங் 1, லார்கன் டுக்கர் 2, ஹேரி டெக்டர் 0, குர்ட்டிஸ் கேம்பர் 7 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார்கள். அதனால் 32/6 என திணறிய அயர்லாந்து கண்டிப்பாக ஆல் அவுட்டாகி 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

திணறல் வெற்றி:
இருப்பினும் மிடில் ஆர்டரில் அதிரடி காட்டிய டிலானி 31, மார்க் அடைர் 15, ஜோஸ்வா லிட்டில் 22* ரன்கள் அடித்து ஆல் அவுட்டாவதை தவிர்த்தனர். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சாகின் அப்ரிடி மற்றும் இமாத் வாசிம் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 107 என்ற சுலபமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு சாய்ம் ஆயுப் 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்த ஓவரிலேயே மறுபுறம் தடுமாறிய முகமது ரிஸ்வான் 17 (16) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அப்போது வந்த பக்கர் ஜாமான் மிகவும் தடுமாற்றமாக விளையாடி 5 (9) ரன்னில் செவிலியன் திரும்பினார். அடுத்ததாக வந்த உஸ்மான் கானை 2 ரன்னில் காலி செய்த மெக்கார்த்தி அதற்கடுத்ததாக வந்த சோயப் கானை டக் அவுட்டாக்கினார். அதனால் 57/5 என திணறிய பாகிஸ்தானுக்கு அடுத்ததாக வந்த இமாத் வசிமும் 4 ரன்களில் அவுட்டானதால் வெற்றி கேள்விக்குறியானது.

- Advertisement -

ஆனாலும் எதிர்புறம் 3வது இடத்தில் களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம் நங்கூரமாக விளையாடினார். இருப்பினும் அவருடன் சேர்ந்து விளையாடிய அப்பாஸ் அப்ரிடி 17 ரன்களில் முக்கிய நேரத்தில் அவுட்டானார். அதனால் மீண்டும் வெற்றி கேள்விக்குறியான போது ஷாகின் அப்ரிடி 2 சிக்ஸருடன் 13* (5) ரன்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் பாபர் அசாம் 32* (34) ரன்கள் எடுத்ததால் 18.5 ஓவரில் 111/7 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் ஒரு வழியாக 3 விக்கெட் வித்தியாசத்தில் திணறலாக வென்றது.

இதையும் படிங்க: மழையை குறை சொல்லாதீங்க.. இந்தியா – பாகிஸ்தானை வெச்சு ஐசிசி செய்யும் வேலையை நிறுத்தனும்.. சேவாக் விமர்சனம்

இதன் காரணமாக இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் குரூப் ஏ பிரிவின் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கும் அவமானத்தை தவிர்த்தது. அந்த வகையில் 3வது இடத்தை பிடித்த அந்த அணி ஆறுதல் வெற்றியுடன் இத்தொடரில் இருந்து வெளியேறியது. மறுபுறம் பாகிஸ்தானுக்கு மிரட்டலை காட்டிய அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பேரி மெக்கார்த்தி 3, குர்ட்டிஸ் கேம்பர் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -