IND vs PAK : தவறான தேர்வு, முக்கிய நேரத்தில் சொதப்பல் – பாகிஸ்தானிடம் இந்தியா போராடி தோல்வியடைய காரணம் இதோ

IND vs PAk Rahul Hardik Pandya
Advertisement

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் வரலாற்றின் 15ஆவது ஆசிய கோப்பையில் லீக் சுற்று முடிந்து சூப்பர் 4 சுற்று துவங்கியுள்ளது. அதில் குரூப் ஏ பிரிவில் முதல் 2 இடங்களை பிடித்த பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் செப்டம்பர் 4ஆம் தேதியன்று மீண்டும் நேருக்கு நேர் மோதின. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு துபாயில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த ஓப்பனிங் ஜோடியில் கேப்டன் ரோகித் சர்மா 3 பவுண்டரி 2 சிக்சருடன் 28 (16) ரன்களில் அவுட்டானார்.

INDvsPAK

அந்த சமயத்தில் விராட் கோலி களமிறங்கிய நிலையில் அடுத்த ஓவரிலேயே 1 பவுண்டரி 2 சிக்சருடன் கேஎல் ராகுல் 28 (20) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 13 (10) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அப்போது வந்த ரிஷப் பண்ட் 14 (12) ரன்களில் அவுட்டாகி வழக்கம்போல சொதப்ப அடுத்து களமிறங்கிய மற்றொரு நட்சத்திரம் ஹர்திக் பாண்டியா டக் அவுட்டாகி மாபெரும் அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

அசத்திய விராட்:
அப்போது வந்த தீபக் ஹூடாவும் 16 (14) ரன்களில் அவுட்டான நிலையில் மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிராக சிம்ம சொப்பனமாக நின்ற விராட் கோலி அரைசதம் அடித்து 4 பவுண்டரி 1 சிக்சருடன் 60 (44) ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் அவுட்டானார். இறுதியில் ரவி பிஷ்னோய் 2 பவுண்டரிகளுடன் 8* (2) ரன்கள் எடுத்ததால் ஓரளவு தப்பிய இந்தியா 20 ஓவர்களில் 181/7 ரன்கள் சேர்க்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சடாப் கான் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 182 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு கேப்டன் பாபர் அசாம் 2 பவுண்டரிகளை பறக்கவிட்டாலும் 14 (10) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

Virat Kohli IND vs PAK

அப்போது களமிறங்கிய பக்கார் ஜமான் 15 (18) ரன்களில் அவுட்டானதால் 63/2 என தடுமாறிய பாகிஸ்தானுக்கு அடுத்ததாக களமிறங்கி மறுபுறம் நின்ற மற்றொரு தொடக்க வீரர் முகமது ரிஸ்வானுடன் ஜோடி போட்டு 3வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை நோக்கி அழைத்து வந்த முகமது நவாஸ் 6 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 42 (20) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதனால் போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது போல் கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்ட போது மறுபுறம் நங்கூரமாக நின்று இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுத்துக் கொண்டிருந்த தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 71 (51) ரன்களில் பாண்டியாவின் 17வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதனால் வெற்றிக்கு கடைசி 3 ஓவரில் 38 ரன்கள் தேவைப்பட்ட போது 18வது ஓவரை வீசிய ரவி பிஷ்னோய் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

Bhuvaneswar Kumar

அதனால் 19வது ஓவரில் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய புவனேஸ்வர் குமார் மொத்தமாக சொதப்பி குஷ்தில் ஷா – ஆசிப் அலி ஆகியோருக்கு எதிராக 2 ஒய்ட், 1 சிக்சர், 2 பவுண்டரியுடன் 19 ரன்களை வாரி வழங்கியதால் இந்தியாவின் வெற்றி பறிபோனது. மீதி வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட போது பந்துவீசிய அரஷ்தீப் சிங் 1, 4, 0 என முதல் 3 பந்துகளில் 5 ரன்கள் கொடுத்து 4வது பந்தில் 16 (8) ரன்கள் எடுத்த ஆசிப் அலியை அவுட் செய்து போராடினார். ஆனாலும் அடுத்த பந்தில் களமிறங்கிய இப்திகர் அஹமத் 2 ரன்களை விளாசி 19.5 ஓவர்களில் 182/5 ரன்களை எடுக்க வைத்து பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார்.

- Advertisement -

காரணம் என்ன:
முதலில் பிளாட்டாக இருந்த இந்த பிட்சில் இந்தியா 200 ரன்களை எடுக்காமல் போனது தோல்விக்கான காரணமாகும். அதற்கு ராகுல், ரோஹித், சூரியகுமார், பண்ட் போன்ற முக்கிய வீரர்கள் 30 ரன்களை கூட எடுக்காதது முக்கிய காரணமாகும். அதைவிட கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக பேட்டிங் செய்து இதுபோன்ற வெற்றியை தீர்மானிக்க கூடிய 15 – 20 ரன்களை எடுக்கும் தினேஷ் கார்த்திக்கை இப்போட்டியில் சம்பந்தமில்லாமல் நீக்கியது தோல்விக்கு மிகமிக முக்கிய காரணமாகும்.

அதேபோல் ஒற்றை இலக்க ரன்களில் இருந்த ஆசிப் அலி கொடுத்த கேட்சை அரஷ்தீப் சிங் தவற விட்டது, 19ஆவது ஓவரில் புவனேஸ்வர் குமார் அனுபவத்தை காட்டாமல் வள்ளலாக செயல்பட்டது போன்ற அம்சங்கள் இந்தியா மீண்டும் பாகிஸ்தானிடம் தலைகுனியும் தோல்வியை சந்திக்க வித்திட்டது. மறுபுறம் டாஸ் அதிர்ஷ்டத்தையும் மேற்குறிப்பிட்ட இந்தியாவின் தவறுகளையும் பயன்படுத்தி அசத்திய பாகிஸ்தான் லீக் சுற்றில் கொடுத்த தோல்விக்கு பதிலடி கொடுத்து சூப்பர் 4 தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளது.

இதனால் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான எஞ்சிய சூப்பர் 4 போட்டிகளில் வென்றால் மட்டுமே இந்தியா இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும் என்ற பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement