ஓமன் நாட்டில் 2024 வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் 18ஆம் தேதி துவங்கும் அந்தத் தொடரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட டாப் 8 அணிகள் மோதுகின்றன. கடைசியாக இலங்கையில் சென்ற வருடம் 50 ஓவர் தொடராக நடைபெற்ற அத்தொடரில் இந்தியா ஏ அணியை ஃபைனலில் தோற்கடித்து பாகிஸ்தான் ஏ அணி கோப்பையை வென்றது.
அதைத்தொடர்ந்து தற்போது ஓமன் நாட்டில் இம்முறை இந்த 2024 எமர்ஜிங் ஆசிய கோப்பை டி20 தொடராக நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக திலக் வர்மா தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அபிஷேக் ஷர்மா உள்ளிட்ட திறமையான வீரர்கள் தேர்வாகியுள்ள அந்த அணியில் தமிழ்நாட்டிலிருந்து சாய் கிஷோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கு தடை:
இந்நிலையில் தங்களுடைய அணியில் இந்தியா எனும் வார்த்தையை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஏ அணியின் கேப்டன் முகமது ஹரிஷ் கூறியுள்ளார். மேலும் கடந்த வருடத்தைப் போலவே இம்முறையும் இந்தியா உள்ளிட்ட அணிகளை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தக்க வைப்போம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.
“ஒரு விஷயத்தை உங்களிடம் நான் சொல்கிறேன். முதல் முறையாக எங்களுடைய அணியில் இந்தியாவைப் பற்றி பேசுவதற்கு நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை. ஏனெனில் நாங்கள் இந்தியாவை பற்றி மட்டும் சிந்திக்க விரும்பவில்லை. மற்ற அணிகளைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். நான் சீனியர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று கடந்த உலகக் கோப்பையிலும் விளையாடியுள்ளேன்”
வேடிக்கையான காரணம்:
“எப்போதும் இந்தியா, இந்தியா என்று நினைக்கும் போது அது மனதளவில் தேவையற்ற அழுத்தத்தை உண்டாக்குகிறது. நாங்கள் மற்ற அணிகளையும் எதிர்கொள்ள வேண்டும். எங்களுடைய அணியில் தற்போது இந்தியா பற்றி பேசுவதை தடை செய்துள்ளோம். அதனால் இதுவரை இந்தியாவைப் பற்றி எங்கள் அணியில் நாங்கள் பேசவில்லை. இந்தியா போலவே அனைத்து அணிகளையும் நாங்கள் மதித்து வெற்றி பெற விரும்புகிறோம்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஹாக்-ஐ டெக்னாலஜிக்கு வழி விடாத மழை.. முதல் நாள் போட்டி ரத்தான காரணத்தை பகிர்ந்த சபா கரீம்
அதாவது தற்போது ஆசிய மற்றும் ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. அதில் வரலாற்றில் நிறைய தோல்விகளை சந்தித்ததால் எப்படியாவது இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்று பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்கள் விரும்புக்கின்றனர். அப்படி தாங்களும் நினைக்கும் போது அழுத்தம் ஏற்படுவதாக முகமது ஹாரிஸ் கூறியுள்ளார். அதனாலேயே இந்தியாவைப் பற்றி சிந்திப்பதையும் பேசுவதையும் தடை செய்துள்ளதாக அவர் கூறுவது குறிப்பிடத்தக்கது.



