
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்கும் இந்தியா ஏற்கனவே 8 முறை ஆசியக் கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக திகழ்கிறது. அதற்கேற்றார் போல் இத்தொடரின் லீக் சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் 3 வெற்றிகளைப் பெற்ற இந்தியா முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
அடுத்து நடைபெறும் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக தோற்கடித்தது. அதனால் இத்தொடரில் 2வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்தது. அது போக பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 7 போட்டிகளிலும் இந்தியா 7 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
அடுத்ததாக எஞ்சிய 2 போட்டிகளில் வங்கதேசம், இலங்கையை தோற்கடித்து இந்தியா ஃபைனலுக்கு சென்று கோப்பையை வெல்லும் என்று நம்பப்படுகிறது. மறுபுறம் இந்தியாவிடம் தோல்வியைச் சந்தித்த பாகிஸ்தான் தங்களது 2வது சூப்பர் 4 போட்டியில் இலங்கையை வீழ்த்தியது. அதனால் வங்கதேசத்தை கடைசிப் போட்டியில் வீழ்த்தினால் ஃபைனலுக்கு தகுதி பெறலாம் என்ற நல்ல நிலைக்கு பாகிஸ்தான் வந்துள்ளது.
அதன் காரணமாக இறுதிப்போட்டியில் மீண்டும் இந்தியா – பாகிஸ்தான் மோதுவதற்கு பிரகாச வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா உட்பட இறுதிப் போட்டியில் விளையாட இன்னும் எந்த அணியும் அதிகாரப்பூர்வமாக தகுதிப் பெறவில்லை என்று பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி தெரிவித்துள்ளார். ஒருவேளை இறுதிப் போட்டிக்கு இந்தியா வந்தால் அவர்களை தோற்கடித்து பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அப்ரிடி பேசியது பின்வருமாறு. “அவர்கள் (இந்தியா) இன்னும் இறுதிப் போட்டிக்கு வரவில்லை. எனவே அவர்கள் இறுதிப் போட்டிக்கு வரும் போது அதைப் பற்றி நாங்கள் பார்ப்போம். நாங்கள் இங்கே இறுதிப் போட்டிக்கு சென்று ஆசியக் கோப்பையை வெல்வதற்காகவே வந்துள்ளோம். இறுதிப் போட்டிக்கு வரும் எந்த அணியையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்”
இதையும் படிங்க: 51 ரன்ஸ்.. பவுலராக கலக்கிய ஆயுஷ் மாத்ரே.. ஆஸி மண்ணில் இளம் இந்தியா கோப்பையை வென்று அசத்தல்
“நாங்கள் அவர்களைத் தோற்கடிப்போம். ஆம் நாங்கள் பெரிய அணிகளுக்கு எதிராக வெற்றி பெற வில்லை. நாங்கள் தரவரிசையில் மட்டுமே வளர்ந்துள்ளோம் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடும் போது நீங்கள் வெற்றி பெறுவீர்கள். அதே போல இங்கே வந்துள்ள அணிகளுக்கு எதிராக நாங்கள் போட்டியிட்டு வெல்வோம்” என்று கூறினார்.