- Advertisement -
உலக கிரிக்கெட்

இரட்டை சதமடித்த புஜாராவை கொண்டாடும் பாகிஸ்தான் ரசிகர்கள் – எதற்கு தெரியுமா? (விவரம் இதோ)

இங்கிலாந்தின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் டிவிஷன் 2 பிரிவில் டுர்ஹாம் மற்றும் சசக்ஸ் ஆகிய அணிகள் மோதின. ஹொவ் நகரில் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி துவங்கிய அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டுர்ஹாம் சசக்ஸ் பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் வெறும் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ட்ரேவஸ்கிஸ் 88 ரன்கள் விளாச சசக்ஸ் சார்பில் ஆரோன் பியர்ட் மற்றும் டாம் கிளார்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய சசக்ஸ் அணிக்கு அலி ஓர் 27, கேப்டன் டாம் ஹெய்ன்ஸ் 54, மேசன் கிரேன் 13 போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சுமாரான ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து களமிறங்கிய டாம் அஷ்லோப் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

புஜாரா இரட்டை சதம்:
அந்த நிலைமையில் சசக்ஸ் அணிக்காக விளையாடும் இந்திய நட்சத்திர வீரர் செடேஸ்வர் புஜாரா களமிறங்கி வழக்கம்போல தனது அணியை தாங்கிப் பிடிக்கும் வகையில் களத்தில் நங்கூரமாக நின்று நிதானமாக பொறுமையாக பேட்டிங்கை வெளிப்படுத்தத் தொடங்கினார். அவருக்கு உறுதுணையாக டாம் கிளார்க் 50 ரன்கள் எடுக்க மறுபுறம் தொடர்ந்து டுர்ஹாம் பவுலர்களை வெளுத்து வாங்கி எளிதாக ரன்களை குவிக்க தொடங்கிய புஜாரா சதம் அடித்தாலும் ஓயாமல் அந்த அணிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து 24 பவுண்டரிகள் உட்பட இரட்டை சதமடித்து 203 ரன்கள் எடுத்து தனது அணி 500 ரன்களை கடந்த பின்பு தான் ஆட்டமிழந்தார்.

அவரின் இந்த அதிரடியால் முதல் இன்னிங்சில் சசக்ஸ் 538 என்ற மிகப்பெரிய ரன்களை எட்டி 315 ரன்கள் முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய டுர்ஹாம் அணிக்கு சீன் டிக்சன் 110*, அலெஸ் லீஸ் 50* ரன்கள் எடுத்ததால் 3-வது நாள் ஆட்ட நேரமுடிவில் 169/0 என்ற நல்ல நிலைமையில் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.

- Advertisement -

அசாருதீன் சாதனை சமன்:
முன்னதாக கடந்த 10 வருடங்களாக ஜாம்பவான் ராகுல் டிராவிட் போல பொறுமையாக பேட்டிங் செய்து இந்தியாவிற்கு பல வெற்றிகளைத் தேடி கொடுத்த புஜாரா கடந்த 2019இல் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக விராட் கோலி தலைமையிலான இந்தியா டெஸ்ட் தொடரை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார். அந்த தொடரில் கடைசியாக சதமடித்த அவர் அதன்பின் 2 வருடங்களாக சதமடிக்காமல் மோசமான பார்மில் திண்டாடிய காரணத்தால் சமீபத்திய இலங்கை டெஸ்ட் தொடரின்போது அதிரடியாக நீக்கப்பட்டார்.

அப்படிப்பட்ட நிலையில் ரஞ்சி கோப்பையில் சொதப்பிய அவரை ஐபிஎல் தொடரிலும் எந்த அணியும் வாங்காத காரணத்தால் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சசக்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமானார். அதை தொடர்ந்து டெர்பிஷைர் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே இரட்டை சதமடித்து 201 ரன்கள் விளாசி பார்முக்கு திரும்பினார். அதன்பின் வோர்ஸ்ஸெஸ்ட்ஷைர் அணிக்கு எதிரான போட்டியிலும் அட்டகாசமான சதமடித்த அவர் 109 ரன்கள் விளாசிய நிலையில் டுர்ஹாம் அணிக்கு எதிரான போட்டியிலும் இரட்டை சதமடித்ததால் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் ஹாட்ரிக் சதங்களை அடித்துள்ளார். இதனால் வரும் ஜூலை மாதம் இதே இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் அவர் மீண்டும் இடம் பிடிக்க வாய்ப்பு அதிகரித்துள்ளது

- Advertisement -

1. இதுவரை 5 இன்னிங்ஸில் 6, 201*, 109, 12, 203 என 531* ரன்களை குவித்துள்ள அவர் முரட்டுத்தனமான பார்முக்கு திரும்பியுள்ளார். அதைவிட 2 இரட்டை சதங்களை அடித்துள்ள அவர் கவுண்டி சாம்பியன்ஷிப் வரலாற்றில் அதிக இரட்டை சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் சாதனையை சமன் செய்துள்ளார்.

2. இதற்குமுன் கடந்த 1991 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளில் டெர்பிஷைர் அணிக்காக டுர்ஹாம் அணிக்கெதிராக முறையே 212, 205 என 2 இரட்டை சதங்களை அசாருதீன் அடித்திருந்தார். அந்த வகையில் அவரின் 28 வருட சாதனையை சமன் செய்துள்ள புஜாரா கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஒரே சீசனில் 2 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்றையும் படைத்தார்.

- Advertisement -

கொண்டாடிய பாக்:
முன்னதாக இதே போட்டியில் சசக்ஸ் அணிக்காக பாகிஸ்தான் வீரர் முஹம்மது ரிஸ்வான் விக்கெட் கீப்பராக விளையாடி வருகிறார். அந்த வகையில் இப்போட்டியில் இரட்டை சதமடித்த புஜாராவுடன் மிடில் ஆர்டரில் களமிறங்கிய அவர் 154 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார். இந்த இருவரும் ஒன்றாக ஜோடி சேர்ந்து விளையாடியதை இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்கள் தற்போது ஒன்றாக சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள்.

ஏனெனில் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லை பிரச்சனை காரணமாக கடந்த பல வருடங்களாக நேருக்கு நேர் கிரிக்கட் தொடர்களில் கூட பங்கேற்காமல் உலக கோப்பையில் மட்டும் பங்கேற்று வருகின்றன.

இதையும் படிங்க : 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கு சென்றுள்ள ரோஹித் சர்மா – அடப்பாவமே

அப்படிப்பட்ட நிலையில் எதிரெதிர் நாடுகளைச் சேர்ந்த இந்த 2 நட்சத்திர வீரர்களும் ஒன்றாக கைகோர்த்து விளையாடுவதை பார்ப்பதெல்லாம் அரிதினும் அரிதான செயல் என்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்கள் ஒன்றாக சேர்ந்து சமூக வலைதளங்களில் நீண்ட நாட்களுக்கு பின்பாசத்தைப் பொழிந்து வருகிறார்கள்.

- Advertisement -