மீண்டும் நிகழ்கிறதா 1992 மேஜிக்? நியூஸிலாந்து டெக்னிக்கை அதற்கே திருப்பி அடித்த பாகிஸ்தான் – பைனலுக்கு சென்றது எப்ப

Pak vs NZ Babar Azam Mohammed Rizwan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் கடைசி நேரத்தில் நெதர்லாந்திடம் தென்னாபிரிக்கா தோற்றதால் கிடைத்த அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. அந்த நிலையில் நவம்பர் 9ஆம் தேதியன்று குரூப் 1 புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த நியூசிலாந்தை முதல் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் எதிர்கொண்டது.

புகழ்பெற்ற சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் முதல் ஓவரிலேயே ஃபின் ஆலன் ஷாகின் அஃப்ரிடியிடம் 4 (3) ரன்களில் அவுட்டாக நிலையில் மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே பவர் பிளே ஓவரின் முடிவில் 21 (20) ரன்களில் ரன் அவுட்டாகி சென்றார். அப்போது நம்பிக்கை நட்சத்திரம் கிளென் பிலிப்ஸ் 6 (8) ரன்களில் அவுட்டானதால் 49/3 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்ற நியூசிலாந்து ஆரம்பத்திலேயே திண்டாடியது.

- Advertisement -

பாகிஸ்தான் அபாரம்:
அதனால் அடுத்து வந்த டார்ல் மிட்சேலுடன் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேன் வில்லியம்சன் கடைசி வரை அதிரடியை காட்டாமல் 46 (42) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இருப்பினும் அவருடன் விளையாடிய டார்ல் மிட்சேல் அதிரடியாக 3 பவுண்டரை 1 சிக்ஸருடன் 53* (35) ரன்களும் ஜிம்மி நீசம் 16* (12) ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றியதால் தப்பிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 152/4 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்தளவுக்கு ஆரம்ப முதலே அபாரமாக பந்து வீசிய பாகிஸ்தான் டெத் ஓவர்களில் 1 சிக்சர்களை கூட கொடுக்காமல் காட்டுக்கோப்பாக செயல்பட்ட நிலையில் அதிகபட்சமாக ஷாஹீன் அஃப்ரிடி 2 விக்கெட்கள் எடுத்தார்.

அதை விட டேவோன் கான்வேயை ரன் அவுட் செய்தது உட்பட ஏராளமான பவுண்டரிகளை தடுத்து அபாரமாக ஃபீல்டிங் செய்த அந்த அணி குறைந்தது 20 – 30 ரன்களை கட்டுப்படுத்தி மிரட்டியது. அதனாலேயே பெரிய புத்துணர்ச்சியை சந்தித்த அந்த அணிக்கு 153 ரன்கள் துரத்தும் போது சமீப காலங்களில் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி சுமாரான பார்மில் தவிக்கும் கேப்டன் பாபர் அசாம் – முகமத் ரிஸ்வான் ஆகியோர் நீண்ட நாட்களுக்கு பின் விஸ்வரூபம் எடுத்தனர்.

- Advertisement -

ஏனெனில் முதல் பந்திலேயே பவுண்டரியுடன் ரன்களை குவிக்க தொடங்கிய இந்த ஜோடி பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு நேரம் செல்ல செல்ல விரைவாக ரன்களை சேர்த்தது. இவர்களை பிரிக்க கேப்டன் வில்லியம்சன் போட்ட அத்தனை திட்டங்களையும் தவிடு பொடியாக்கி 13 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்ற இந்த ஜோடி 105 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்த போது 7 பவுண்டரியுடன் அரை சதமடித்த பாபர் அசாம் 53 (42) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் அவருடன் பேட்டிங் செய்த முகமது ரிஸ்வான் தனது பங்கிற்கு 5 பவுண்டரியுடன் 57 (43) ரன்களில் அவுட்டானார்.

இறுதியில் முஹம்மது ஹாரிஸ் ரன்கள் 30 (26) எடுத்ததால் 19.1 ஓவரிலேயே 153/3 ரன்களை எடுத்த பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரும் நவம்பர் 13ஆம் தேதியன்று நடைபெறும் ஃபைனலுக்கு முதல் அணியாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. பொதுவாகவே ஃபீல்டிங்கில் அபாரமாக செயல்பட்டு வெற்றிகளை பெறும் நியூசிலாந்து இப்போட்டியில் கோட்டை விட்ட அதே டெக்னிக்கை அந்த அணிக்கு எதிராக கச்சிதமாக பயன்படுத்திய பாகிஸ்தான் வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. அத்துடன் முக்கிய நேரத்தில் பாபர் அசாம் – ரிஸ்வான் ஜோடி ஃபார்முக்கு திரும்பி பெரிய ரன்களை குவித்து இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.

அதில் ஆரம்பத்தில் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் கடைசி நேர அதிர்ஷ்டத்துடன் கொதித்தெழுந்து அடுத்தடுத்த வெற்றிகளுடன் பைனலுக்கு முன்னேறியுள்ளதால் 1992இல் இதே ஆஸ்திரேலிய மண்ணில் இம்ரான் கான் தலைமையில் கோப்பையை வென்றது போல் இம்முறையும் கோப்பையை வெல்லும் என்று அந்நாட்டு ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

மறுபுறம் டாஸ் வென்றும் பேட்டிங்கில் 160 ரன்களை கூட எடுக்க தவறிய நியூசிலாந்து அனலாக பந்து வீசத் தவறியதுடன் ஃபீல்டிங்கில் ஒரு சில முக்கிய கேட்ச்சுகளை கோட்டை விட்டது. அதனால் கடந்த வருடம் பைனலில் ஆஸ்திரேலியாவிடம் கோப்பையை கோட்டை விட்ட அந்த அணி இம்முறை ஆஸ்திரேலியா மண்ணில் பைனலுக்கு கூட தகுதி பெற முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.

Advertisement