துபாயில் அண்டர்-19 ஆசியக் கோப்பை 2025 ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அந்தத் தொடரில் லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றில் வெற்றி கண்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய இறுதிப்போட்டி டிசம்பர் 21ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 50 ஓவரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 347/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் சதமடித்து 172 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தார். மறுபுறம் சுமாராக பந்து வீசிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக தீபேஷ் திவேந்திரன் 3 விக்கெட்டுகளை எடுத்தார்.
சூர்யவன்சி பதிலடி:
அடுத்ததாக விளையாடிய இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் நம்பிக்கை நட்சத்திரம் வைபவ் சூரியவன்சி அதிரடியாக விளையாடி 1 பவுண்டரி 3 சிக்சருடன் 26 (10) ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தைக் பெற்றார். ஆனால் அப்போது அலி ராசா வீசிய பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்த சூரியவன்சி கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
அவருடைய மிகப்பெரிய விக்கெட்டை எடுத்த பாகிஸ்தான் பவுலர் அலி ராசா வெறித்தனமாக கொண்டாடினார். ஆனால் அப்போது சில தவறான வார்த்தைகளை சொன்ன சூரியவன்சியை வம்பிழுக்கும் வகையில் கொண்டாடினார். அதனால் கோபமடைந்த சூரியவன்சி தன்னுடைய காலணியைக் காண்பித்து சில வார்த்தைகளை சொல்லி அவருக்கு தக்க பதிலடி கொடுத்து விட்டு சென்றார்.
இந்தியாவுக்கு நேர்ந்த சோகம்:
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்து வந்த ஆரோன் ஜார்ஜ் 16, விகான் மல்கோத்ரா 7, வேதாந்த் திரிவேதி 9, அபிஞான் குண்டு 13, கனிஷ்க் சவுகான் 9, கிளன் பட்டேல் 19 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். கடைசியில் திவேந்திரன் 36 (16) ரன்கள் எடுத்தும் இந்தியாவை 26.2 ஓவரில் வெறும் 156 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆல் அவுட்டாக்கியது. அதனால் 191 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற பாகிஸ்தான் சாம்பியன் பட்டத்தை வென்றது.
இதையும் படிங்க: ஷிவம் தூபேவிற்கு இதுவே கடைசி டி20 உலககோப்பை தொடர்.. ஏன் தெரியுமா? – காரணம் இதோ
இதையும் சேர்த்து 2வது முறையாக பாகிஸ்தான் அண்டர்-19 ஆசியக் கோப்பையை வென்றது. சொல்லப்போனால் 2012இல் இந்தியாவுடன் கோப்பையை பகிர்ந்து கொண்ட அந்த அணி இப்போது தான் முதல் முறையாக முழுமையாக வென்றுள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அலி ராசா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். மறுபுறம் லீக், சூப்பர் 4 சுற்றில் தோல்வியைச் சந்திக்காமல் அசத்திய இந்தியா இறுதிப்போட்டியில் தோற்றதால் சோகத்தை சந்தித்தது.



