
தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு அந்த அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோத உள்ளது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று ஜனவரி 19 ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு பார்ல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரை போலவே இந்த தொடரிலும் இந்தியாவை வீழ்த்தி சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் தென்ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது. மறுபுறம் டெஸ்ட் தொடரில் ஏமாற்றமடைந்த இந்தியா ஒருநாள் தொடரில் வெற்றி பெற்று தென்ஆப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்க தயாராகி உள்ளது.
பார்ல் மைதானம்:
இத்துடன் இந்த போட்டியில் முதல் முறையாக கேஎல் ராகுல் தலைமையிலான இந்திய அணி விளையாட உள்ளதால் இப்போட்டிக்காக இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த போட்டியானது தென்ஆப்பிரிக்காவில் உள்ள பார்ல் நகரில் இருக்கும் “போலண்ட் பார்க்” கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. பின் பகுதியில் அழகிய மலைத்தொடர்களை கொண்டுள்ளதால் மிகுந்த அழகுடன் காட்சி அளிக்கக் கூடிய இந்த மைதானத்தில் அமர்ந்து கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது என்பது உண்மையான கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாகும்.
ராசியான பார்ல்:
இந்த அழகிய மைதானத்தில் வரலாற்றில் இதுவரை 13 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 7 போட்டிகளில் வென்றுள்ளன. சேசிங் செய்த அணிகள் 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன. 1 போட்டி டையில் முடிந்தது. இந்த மைதானத்தில் வரலாற்றில் இதற்கு முன் தென்ஆப்பிரிக்காவை ஒரு முறை கூட இந்தியா சந்தித்தது இல்லை. ஆனாலும் இந்த மைதானம் இந்தியாவிற்கு மிகுந்த ராசியான ஒன்று எனக் கூறலாம்.
ஏனெனில் இந்த மைதானத்தில் வரலாற்றில் இந்தியா 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் கடந்த 1997 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடந்த முதல் போட்டி “டை” ஆனது. அதன்பின் கடந்த 2001 ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் கென்யாவை எதிர்கொண்ட இந்தியா 186 ரன்கள் வித்தியாசத்திலும் 2003 ஆம் ஆண்டு நெதர்லாந்தை எதிர்கொண்ட இந்தியா அதில் 68 ரன்கள் வித்தியாசத்திலும் அபார வெற்றி பெற்றது. இம்முறை இம்மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவை முதல் முறையாக இந்தியா எதிர்கொள்ள இருக்கிறது.
அதிக ரன்கள் :
இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 3 போட்டிகளில் 204 ரன்களை 68 என்ற சராசரியில் குவித்துள்ளார். இந்த மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டிகளில் ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச ஸ்கோர் : சச்சின் டெண்டுல்கர், 146 ஆகும்.
அதிக விக்கெட்கள் :
இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளராக முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.
அதிகபட்ச ஸ்கோர் :
இந்த மைதானத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு கென்யாவுக்கு எதிராக இந்தியா தனது அதிகபட்ச ஸ்கோராக 351/3 ரன்களை பதிவு செய்துள்ளது.
வரலாற்று பதிவுகள்:
ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட்டில் இந்த மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் : 353/6 – தென்ஆப்பிரிக்கா, வங்கதேசத்திற்கு எதிராக, 2017. இந்த மைதானத்தில் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகக்குறைந்த ஸ்கோர் : 36 ஆல் அவுட் – கனடா, இலங்கைக்கு எதிராக, 2003. அதேபோல் இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் : 176 – ஏபி டிவில்லியர்ஸ், வங்கதேசத்துக்கு எதிராக, 2017.