
இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ எதிர்வரும் 2025 ஆசிய கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த வகையில் இன்று வெளியான இந்த அறிவிப்பில் : சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும், சுப்மன் கில் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு அவர்களது தலைமையின் கீழ் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது. அதில் முக்கிய வீரர்கள் சிலருக்கு இடம் கிடைக்காதது பெருமளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அதிக ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை பெற்ற சாய் சுதர்சன் மற்றும் அதிக விக்கெட்டுகளை எடுத்து பர்ப்பிள் தொப்பியை பெற்ற பிரசித் கிருஷ்ணா ஆகியோரை தேர்வு செய்யாதது ஏன்? என்ற விவாதங்களை எழுப்பியுள்ளது.
ஏனெனில் எப்போதுமே இந்திய டி20 அணி தேர்வு செய்யப்படும்போது ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் வீரர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் 15 போட்டிகளில் விளையாடி 1 சதம் மற்றும் 6 அரைசதம் என 156 ஸ்ட்ரைக் ரேட்டுடனும், 54 ரன்கள் சராசரியுடனும் 759 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியிருந்தார்.
அவரது இந்த தொடர்ச்சியான சிறப்பான ஆட்டம் டி20 அணிக்கு அவசியம் தேவை என்பதால் அவரை டி20 அணியில் சேர்க்க வேண்டும் என்ற பேச்சுகள் இருந்து வந்தது. ஆனால் தற்போது ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை. இதன்காரணமாக அவர் ஏன் ஆசிய கோப்பைக்கான அணியில் சேர்க்கப்படவில்லை? என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது.
அதேபோன்று பந்துவீச்சில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் தொடரில் அதே குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த பிரசித் கிருஷ்ணா மிகச்சிறப்பாக செயல்பட்டு 15 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட் கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரராக பர்ப்பிள் தொப்பியை கைப்பற்றியிருந்தார். இப்படி ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசிய அவர் இங்கிலாந்து தொடரிலும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார்.
இதையும் படிங்க : ஆசிய கோப்பை தொடரில் கே.எல் ராகுல் விளையாடனும்னா.. இந்தவொரு சான்ஸ் தான் இருக்கு – விவரம் இதோ
அதனால் அவரையும் ஏன் டி20 அணியில் சேர்க்கவில்லை? என்ற கேள்வி எழுந்துள்ளது. சுப்மன் கில் இந்திய அணியின் எதிர்கால கேப்டனாக பார்க்கப்படும் வேளையில் அவருக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்துவிட்டு இப்படி ஐபிஎல் தொடரில் அதே அணியில் அசத்திய இரண்டு பேருக்கு வாய்ப்பு கிடைக்காதது ஏன்? என்பது பெரியளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.