இங்கிலாந்து அணிக்கு எதிராக ஹெட்டிங்லி நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய அணியாது இங்கிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது. ஏற்கனவே இந்த தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் போன்ற அனுபவ வீரர்களின் ஓய்வு பெற்றதால் இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி எவ்வாறு இந்த தொடரை எதிர்கொள்ளப்போகிறது? என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது.
ரிஷப் பண்டை தொடர்ந்து துரத்தும் சோகம் :
இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும் கடைசி நாள் ஆட்டத்தின் போது தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருந்தாலும் ஒருபுறம் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டம் வருங்காலத்திற்கு நம்பிக்கை சேர்க்கும் வகையில் அமைந்தது.
ஏனெனில் நடைபெற்று முடிந்த இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் 5 சதங்கள் இந்திய அணி சார்பாக அடிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும், துணை கேப்டனுமான ரிஷப் பண்ட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தி இருந்தார்.
இப்படி இரண்டு இன்னிங்ஸ்களில் அவர் சதம் அடித்திருந்தாலும் இந்திய அணி தோல்வியை சந்தித்திருப்பது நிச்சயம் அவருக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கலாம். அதுமட்டும் இன்றி புள்ளி விவரத்தின் அடிப்படையிலும் ரிஷப் பண்ட் வெளிநாடுகளில் சதமடித்த போதெல்லாம் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
குறிப்பாக “சேனா” நாடுகள் என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சதம் அடிப்பது எல்லாம் பேட்ஸ்மேன்களுக்கு கடினமான ஒன்று. ஆனால் அப்படி அங்கு நடைபெறும் வெளிநாட்டு ஆட்டங்களிலும் ரிஷப் பண்ட் இதுவரை 6 சதங்கள் அடித்துள்ளார்.
இதையும் படிங்க : விராட் கோலி இந்த தேவையில்லாத வேலை செய்யாம இருந்திருந்தா.. கேரண்டியா அசத்திப்பாரு.. கங்குலி அதிருப்தி
அப்படி அவர் 6 முறை சதம் அடிக்கையில் இந்திய அணி ஐந்து முறை தோல்வியை சந்தித்துள்ளது. ஒரே ஒருமுறை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மட்டுமே டிரா செய்துள்ளது. மற்றபடி ரிஷப் பண்ட் சதம் அடித்த போட்டிகளில் எல்லாம் இந்தியா தோல்வியையே சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



