
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கியது. அந்த தொடருக்கு முன்பாக விராட் கோலி மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றனர். அதனால் சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இம்முறை இங்கிலாந்து மண்ணில் களமிறங்குகிறது.
அதன் காரணமாக இங்கிலாந்து மண்ணில் இம்முறையும் இந்தியா வெல்வது கடினமாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த காலங்களில் ஜாம்பவான் வீரர்கள் விளையாடியும் சவாலான இங்கிலாந்து மண்ணில் 2007க்குப்பின் இந்திய அணியால் வெற்றி காண முடியவில்லை. இந்நிலையில் விராட் கோலி போன்ற நம்பிக்கை நட்சத்திரம் விளையாடாதது இந்திய அணிக்கு பின்னடைவு என்று இங்கிலாந்து வீரர் ஓலி போப் கூறியுள்ளார்.
அதையும் தாண்டி இந்திய அணி திறமையான இளம் வீரர்களுடன் தங்களுக்கு சவாலைக் கொடுக்கும் என்று அவர் கூறியுள்ளார். அந்த சவாலை சமாளித்து இந்திய அணியை தோற்கடிக்க தாங்களும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஓலி போப் பேசியது பின்வருமாறு. “இது இளமையான அணி. ஆனால் இந்த இந்திய வீரர்களிடம் நிறைய ஆழமான திறமை இருக்கிறது”
“எனவே அவர்கள் நல்ல இளம் வீரர்களுடன் இங்கே வந்திருக்கிறார்கள். ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு சத்தமாக பேசக்கூடிய ஒளி நிறைந்த விராட் கோலியை போன்றவரை இந்தியா மிஸ் செய்யும். ஆனால் அவர்களுடைய மற்ற வீரர்கள் திறமை மற்றும் தன்னம்பிக்கையை பெற்றுள்ளார்கள். அதற்கு எங்களுடைய வீரர்களும் தயாராக இருக்கிறார்கள்”
“இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது எங்களுக்கு சிறந்த நேரமாகும். கடந்த கோடைக் காலத்தில் நாங்கள் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாடினோம். ஆனால் இந்திய அணி நிறைய தரத்தைக் கொண்டு வரும். எனவே நாங்கள் அதிகமாக எதையும் பார்க்காமல் சிறப்பாக விளையாடுவதில் கவனம் செலுத்த வேண்டும்”
இதையும் படிங்க: அனுபவம் பேசும்.. 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அவங்க தான் ஜெய்ப்பாங்க.. ஹர்பஜன் சிங் கணிப்பு
“இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது மிகவும் சரியான நேரமாக இருக்கிறது. ஏனெனில் அடுத்ததாக ஆஷஸ் தொடர் வருகிறது. அதற்கு முன்பாக இத்தொடரில் விளையாட நாங்கள் உற்சாகத்துடன் காத்திருக்கிறோம்” என்று கூறினார். இந்தத் தொடரிலிருந்து 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையும் துவங்க உள்ளது குறிப்பிடுத்தக்கது.