இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிவடைந்துள்ள நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டி இன்று அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் காலை 9.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த முதல் டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாகவும் பிங்க் நிற பந்தில் விளையாடி போவதாகவும் அறிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி தற்போது இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் விடைப்பெறுவதாக கூறியுள்ளார்.
விராட் கோலிக்கு முதல் குழந்தை பிறக்க இருப்பதால் இந்த போட்டி முடிந்து அவர் உடனடியாக இந்தியா திரும்புகிறார். இதனால் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதால் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டான புஜாரா மற்றும் ஹனுமா விஹாரி மீது பொறுப்பு அதிகரித்துள்ளது. மேலும் மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளுக்கும் தற்போதைய துணைக்கேப்டனான ரஹானே கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா இந்திய டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டான ஹனுமா விஹாரி குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் “தற்போதைய இந்திய அணியின் விவிஎஸ் லட்சுமணன், ஹனுமா விஹாரி தான்.
விஹாரி ஐபிஎல் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. இருப்பினும் இந்திய டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டாக திகழ்கிறார். இவர் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடினால் குறிப்பாக வெளி நாட்டில் நடைபெறும் டெஸ்டில் சிறப்பாக விளையாடினால் நல்ல மரியாதை கிடைக்கும். இது அவருக்கு மிகவும் முக்கியமான தொடர். இவர் பிங்க் பந்து பயிற்சி போட்டியில் சதம் அடித்துள்ளார். இந்த பந்தில் சதம் அடிப்பது அவ்வளவு எளிதல்ல.
இவரை தற்போதைய இந்திய அணியின் விவிஎஸ் லட்சுமணன் என்று கூறலாம். லட்சுமணன் ஒரு டெஸ்ட் வீரர். இவருக்கு ஒருநாள் போட்டியில் இடம் கிடைக்காத நிலையில், டெஸ்ட் போட்டியில் கிடைக்கும் வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி ஒவ்வொரு போட்டியிலும் தன்னை நிரூபிக்க வேண்டும். இதே போல் தான் தற்போது விஹாரியும் இருக்கிறார்” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரக்யான் ஓஜா பேசியிருக்கிறார்.