வெறும் அரை நொடியில் செய்த நூலிழை தவறால் வெற்றியை கோட்டைவிட்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர், ரசிகர்கள் சோகம் – என்ன நடந்தது

Odean Smith PBKS vs GT
- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் மார்ச் 8-ஆம் தேதியான நேற்று நடந்த 16-வது லீக் போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் பங்கேற்றன. மும்பையின் ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த அந்த போட்டியில் கடைசி பந்து வரை அனல் பறந்த நிலையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற குஜராத் தனது 3-வது வெற்றியை பதிவு செய்தது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர் கேப்டன் மயங்க் அகர்வால் 5 ரன்களிலும் ஜானி பேர்ஸ்டோ 8 ரன்களில் ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் 35 (30) ரன்கள் எடுத்தார்.

மாஸ் காட்டிய லிவிங்ஸ்டன் – ரசித் கான்:
அடுத்து வந்த இளம் வீரர் ஜிதேஷ் சர்மா தனது பங்கிற்கு அதிரடியாக 23 (11) ரன்கள் எடுக்க அடுத்ததாக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓடின் ஸ்மித் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் மறுபுறம் குஜராத் பவுலர்களை பிரித்து மேய்ந்து கொண்டிருந்த இங்கிலாந்தின் லியம் லிவிங்ஸ்டன் 27 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்கள் உட்பட 64 ரன்கள் எடுத்திருந்தபோது ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய தமிழக வீரர் ஷாருக்கானை 15 (8) ரன்களில் காலி செய்த ரஷீத் கான் பஞ்சாப்பை 200 ரன்களை தொடவிடாமல் 3 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார்.

- Advertisement -

அதன்பின் 190 என்ற இலக்கை துரத்திய குஜராத்துக்கு தொடக்க வீரர் மேத்யூ வேட் 6 ரன்களில் அவுட்டாகி நடையை கட்ட அடுத்து களமிறங்கிய இளம் தமிழக சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் அதிரடியாக பஞ்சாப் பவுலர்களை விளாசினார். 2-வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் குவித்து குஜராத்தை மீட்டெடுத்த இந்த ஜோடியில் சுதர்சன் 35 (30) ரன்களில் ஆட்டமிழந்தார்.

தெறிக்கவிட்ட கில் – ராகுல் திவாடியா:
ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக களத்தில் நின்று அதிரடியாக 59 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 1 சிக்சர் உட்பட 96 ரன்கள் விளாசிய சுப்மன் கில் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டதுடன் முக்கியமான 19-வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட போது 27 (18) ரன்கள் எடுத்துப் போராடிக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியா ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் பவுலர் ஓடின் ஸ்மித் வீசிக்கொண்டிருந்த அந்த ஓவரில் அடுத்ததாக களமிறங்கிய இளம் இந்திய வீரர் ராகுல் திவாடியா 2-வது பந்தில் சிங்கிள் எடுக்க 3-வது பந்தை எதிர்கொண்ட தென்ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் பவுண்டரியை பறக்கவிட்டு 4-வது பந்தில் சிங்கள் எடுத்தார். அதன் காரணமாக கடைசி 2 பந்துகளில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட போது அதில் அடுத்தடுத்த மெகா சிக்ஸர்களை தெறிக்கவிட்ட ராகுல் திவாடியா பஞ்சாப்புக்கு அதிர்ச்சியைக் கொடுத்து தனி ஒருவனாக குஜராத்தை கடைசி நேரத்தில் வெற்றி பெற செய்தார்.

நூலிழையில் நடந்த தவறு:
இப்படி கடைசி நேரத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்தால் பஞ்சாப் ரசிகர்கள் மிகுந்த சோகமடைந்துள்ளனர். அதிலும் கடைசி ஓவரை வீசிக்கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் பவுலர் ஓடின் ஸ்மித் செய்த நூலிழை தவறால் வெற்றி பறிபோனது பல பஞ்சாப் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது.

- Advertisement -

அதாவது வெற்றிக்கு கடைசி 3 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டபோது அதை எதிர்கொண்ட தென்ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் அதை இழுத்து அடிக்க முயன்ற போதிலும் அந்த பந்து நேராக அதை வீசிய ஓடின் ஸ்மித்திடமே மீண்டும் வந்தது. அதை பிடித்த அவர் தேவையில்லாமல் எதிர்ப்புற பேட்ஸ்மேனாக இருந்த ராகுல் திவாடியா கிரீஸை விட்டு ஒருசில அடிகள் மட்டுமே வெளியே வந்ததால் ரன் அவுட் செய்ய முயற்சித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரின் குறி தப்பியதால் அந்தப் பந்து ஸ்டம்ப்பை தாண்டி சென்றது.

அதைப் பயன்படுத்திய ராகுல் திவாடியா உடனடியாக சிங்கிள் எடுத்து அடுத்த 2 பந்துகளில் பிரம்மாண்ட சிக்ஸர்களை விளாசி ஓடின் ஸ்மித்க்கும் பஞ்சாப்புக்கும் தோல்வியை பரிசளித்தார். இங்கே தவறு என்னவெனில் அந்த இடத்தில் ரன் அவுட்டுக்கான வாய்ப்பே இல்லை. அப்படிப்பட்ட நிலையில் ரன் அவுட் செய்ய முயற்சித்த அவரின் ஸ்டம்ப் மீதான குறி தவறியது. அதனால் தேவையில்லாமல் பஞ்சாப்புக்கு ஒரு ரன் கொடுத்து திவாடியாவை பேட்டிங் செய்யும் இடத்திற்கு அனுப்பி வைத்த அவர் அதன்பின் 2 சிக்சர்களை அடிக்கும் அளவுக்கு மோசமாக பந்து வீசினார்.

ஒருவேளை அந்த பந்தை அவர் ரன்-அவுட் செய்ய முயற்சிக்காமல் கையிலேயே வைத்திருந்தால் திவாடியா பேட்டிங் செய்யும் இடத்திற்கு சென்றிருக்கவும் மாட்டார். அந்த தருணத்தில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைபட்டதால் டேவிட் மில்லர் ஒருவேளை 2 சிக்சர்கள் அடித்திருந்தாலும் கூட பஞ்சாப் 1 ரன்னில் வெற்றி பெற்றிருக்கும். இப்படி நூலிழையில் செய்த தவறால் வெற்றியை கோட்டை விட்ட ஓடின் ஸ்மித் அதன் காரணமாக மனமுடைந்து அப்படியே மைதானத்தில் அமர்ந்தபோது பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வால் அவருக்கு ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்தார்.

Advertisement