ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை ஏமாற்றத்தை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு பயணித்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியது. சீனியர்கள் இல்லாமல் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா முதலில் நடைபெற்ற டி20 தொடரில் மழைக்கு மத்தியில் கோப்பையை வென்று அசத்தினாலும் அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் 1 – 0 என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கி கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. அந்த நிலைமையில் வென்றால் தான் குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலைமையில் நவம்பர் 30ஆம் தேதியன்று நடைபெற்ற கடைசி போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
கிறிஸ்ட்சர்ச் நகரில் இந்திய நேரப்படி காலை 7:00 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் களமிறங்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில் 13 (22) கேப்டன் ஷிகர் தவான் 28 (45) என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகிய ஏமாற்றிய நிலையில் அடுத்து வந்த ரிஷப் பண்ட் வழக்கம் போல 10 ரன்களில் நடையை காட்டினார். போதாக்குறைக்கு மறுபுறம் 8 பவுண்டரியுடன் போராடிய ஸ்ரேயாஸ் ஐயர் முக்கிய நேரத்தில் 49 (59) ரன்களில் அவுட்டான நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் 6, தீபக் ஹூடா 12 என முக்கிய வீரர்கள் பொறுப்பின்றி சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர்.
ரசிகர்கள் சோகம்:
அதனால் 149/6 என தடுமாறிய இந்தியா 200 ரன்களை தாண்டுமா என்று ரசிகர்கள் கவலையடைந்த போது நங்கூரமாக நின்று மானத்தை காப்பாற்றும் வகையில் செயல்பட்ட தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 51 (64) ரன்கள் குவித்து போராடி ஆட்டமிழந்தார். அதனால் ஓரளவு தப்பிய இந்தியா 47.3 ஓவரில் 219 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக டார்ல் மிட்சேல் மற்றும் ஆடம் மில்னே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத்தொடர்ந்து 220 ரன்களை துரத்திய அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கிய ஃபின் ஆலன் 97 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 8 பவுண்டரி 1 சிக்ஸருடன் 57 (54) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து அவுட்டானார்.
அவருடன் மறுபுறம் பொறுமையாக செயல்பட்ட மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே 38* (51) ரன்கள் எடுத்திருந்த போது மழை வந்தது. அப்போது 18 ஓவரில் 104/1 ரன்கள் எடுத்திருந்த நியூஸிலாந்து டிஎல்எஸ் விதிமுறைப்படி 50 ரன்கள் முன்னிலையில் இருந்தது. ஆனாலும் முடிவை நிர்ணயிக்க 20 ஓவர்கள் விளையாடியிருக்கு வேண்டுமென்ற விதிமுறைப்படி அந்த அணி 2 ஓவர்கள் குறைவாக எதிர்கொண்டிருந்தது. அந்த நிலையில் தொடர்ந்து பெய்த மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்து மைதானத்தை தண்ணீரால் நிரப்பியது. அதனால் சூழலை ஆராய்ந்த நடுவர்கள் மேற்கொண்டு போட்டியை நடத்த முடியாது என்ற முடிவுக்கு வந்தனர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக டிஎல்எஸ் விதிமுறைப்படி 50 ரன்களை நியூசிலாந்து கூடுதலாக எடுத்திருந்தும் 20 ஓவர்களை தொடாத காரணத்தால் இப்போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி முடிவதாக நடுவர்கள் அறிவித்தனர். ஒருவேளை இன்னும் 10 நிமிடங்கள் கழித்து மழை வந்திருந்தால் கூட நியூசிலாந்து இப்போட்டியில் வென்றிருக்கும். அந்த வகையில் இப்போட்டியில் படுதோல்வியை சந்திப்பதிலிருந்து மழையால் இந்தியா தப்பினாலும் ரசிகர்கள் சோகமாகவே காணப்படுகிறார்கள். ஏனெனில் 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தின் முதல் தொடராக இத்தொடர் பார்க்கப்படுகிறது.
அதில் முதல் போட்டியிலே 306 ரன்கள் குவித்தும் பந்து வீச்சில் சொதப்பி தோற்ற இந்தியா இப்போட்டியிலும் 1 விக்கெட்டை மட்டுமே எடுத்து மோசமாகவே செயல்பட்டது. முன்னதாக டி20 உலகக்கோப்பை செமி பைனலிலும் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை. அந்த வகையில் 2023 உலக கோப்பையை வெல்லும் பயணத்தின் முதல் தொடரிலேயே மீண்டும் பந்து வீச்சில் முன்னேறாமல் இந்தியா செயல்பட்டதை பார்க்கும் ரசிகர்கள் ஆரம்பமே இப்படியா? என்று வேதனை தெரிவிக்கிறார்கள். மறுபுறம் இப்போட்டியில் மழையால் வெற்றியை கோட்டை விட்டாலும் 1 – 0 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற நியூஸிலாந்து சொந்த மண்ணில் இதே போல டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து பழி தீர்த்துக் கொண்டது.