
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மார்ச் 5ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள லாகூரில் நடைபெற்றது. அதில் குரூப் பி பிரிவில் முதலிடம் பிடித்த தென்னாப்பிரிக்கா மற்றும் ஏ பிரிவில் இரண்டாவது இடம் பிடித்த நியூசிலாந்து அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு வில் எங் 21 ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் ரச்சின் ரவிந்த்ரா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த நம்பிக்கை நட்சத்திர அனுபவ வீரர் கேன் வில்லியம்சன் தம்முடைய பங்கிற்கு நிதானமாக தென்னாப்பிரிக்கா பவுலர்களை எதிர்கொண்டார்.
8வது ஓவரில் இணைந்த இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல தென்னாப்பிரிக்க பவுலர்களை அபாரமாக எதிர்கொண்டு வேகமாக ரன்கள் குவித்து அரை சதத்தை அடித்தது. அதை பிரிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா தடுமாறியதைப் பயன்படுத்திய அந்த ஜோடி சதத்தை அடித்து 2வது விக்கெட்டுக்கு 164 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது. அதில் ரவீந்தரா சதத்தை அடித்து 108 (101) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.
அவருடன் இணைந்து விளையாடிய வில்லியம்சன் தனது பங்கிற்கு சதத்தை விளாசி 102 (94) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக வந்த டாம் லாதம் 4 ரன்னில் ரபாடா வேகத்தில் பெவிலியன் திரும்பினார். ஆனால் டேரில் மிட்சேல் – கிளன் பிலிப்ஸ் ஆகியோர் டெத் ஓவர்களில் அதிரடியாக விளையாடி தென் ஆப்பிரிக்காவை பந்தாடினர்.
அதில் மிட்சேல் அரை சதத்தை நழுவ விட்டாலும் 49 (37) ரன்கள் எடுத்தார். மறுபுறம் முரட்டுத்தனமாக அடித்த பிலிப்ஸ் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 49* (27) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார். கூடவே மைக்கேல் பிரேஸ்வல் 16 (12) ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் நியூஸிலாந்து 362-6 ரன்களை குவித்து சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற உலக சாதனை படைத்தது.
இதையும் படிங்க: இனிமேல் சிஎஸ்கே உன்னோட டீம்.. இந்த உதவி கூட செய்ய மாட்டேன்னு தோனி சொன்னாரு.. ருதுராஜ் பேட்டி
இதற்கு முன் இதே தொடரில் இதே லாகூர் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 356-5 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக லுங்கி நெகிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதனால் உலக சாதனை இலக்கை தொட்டால் மட்டுமே இப்போட்டியில் வென்று ஃபைனல் செல்ல முடியும் என்ற அழுத்தமான சூழ்நிலைக்குள் சிக்கியுள்ள தென்னாப்பிரிக்கா பேட்டிங் செய்து வருகிறது.