2023 உலகக் கோப்பையில் நடந்த ஒரே நல்ல விஷயம் அது தான்.. சமமா பாராட்டுங்க.. கம்பீர் அதிரடி கருத்து

Gautam Gambhir 3
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியா 6வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது. ஆனால் 2011 போல சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி இறுதிப் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பி வெறும் 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

முன்னதாக ரோகித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் தோல்வியை சந்திக்காத ஒரே அணியாக எதிரணிகளை மிரட்டிய இந்தியா செமி ஃபைனலில் நியூசிலாந்தை தோற்கடித்து தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து அசத்தியது. அந்த வெற்றிகளுக்கு பேட்டிங் துறையில் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகிய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி முக்கிய பங்காற்றினார்கள்.

- Advertisement -

கம்பீர் பாராட்டு:
ஆனால் அவர்களையே மிஞ்சும் வகையில் முகமது ஷமி, பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகிய பவுலர்களும் எதிரணி பேட்ஸ்மேன்களை தெறிக்க விட்டு இந்தியா பெரிய வெற்றிகளை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தனர். குறிப்பாக ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 130, இலங்கையை 55, தென்னாப்பிரிக்காவை 83 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி அட்டகாசமான வெற்றிகளை பெற கருப்பு குதிரையாக அமைந்தார்.

இந்நிலையில் 2023 உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்தாலும் பேட்ஸ்மேன்களுக்கு நிகராக பவுலர்கள் பாராட்டப்பட்டதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அதாவது பொதுவாகவே இந்திய கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் தான் அதிக பாராட்டுகளை பெற்று வரும் நிலைமை 2023 உலகக் கோப்பையில் மாறியதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த உலகக் கோப்பையில் நிகழ்ந்த ஒரு நல்ல விஷயம் என்னவெனில் நாம் பவுலர்களை பற்றி அதிகமாக பேச துவங்கியுள்ளோம். இது தொடர்ந்தால் பவுலராக வருவதற்கு வருங்காலங்களில் எந்த வீரர்களும் தயங்க மாட்டார்கள். ஒருநாள் கிரிக்கெட்டில் விதிமுறைகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. அதே போல ஐபிஎல் தொடரிலும் பவுலர்களை விட பேட்ஸ்மேன்கள் அதிக பணத்தை பெறுகின்றனர்”

இதையும் படிங்க: 25 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணிக்கெதிராக சாதனை நிகழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் – விவரம் இதோ

“பொதுவாக பாகிஸ்தான் போல இந்தியாவால் வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க முடியாது என்று சொல்வார்கள். ஆனால் தற்போது நம்மிடம் இருக்கும் 3 பேர் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சார்களாக இருக்கின்றனர். அவர்களைப் பற்றி தற்போது நாமும் அதிகமாக பேசுவதை நினைத்து பெருமைப்படுகிறேன். இது அடுத்த தலைமுறையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று கூறினார். அந்த வகையில் வருங்காலங்களில் சச்சின், விராட் கோலி போல வேண்டும் என்ற எண்ணத்திற்கு நிகராக ஷமி, பும்ரா போல உருவாக வேண்டும் என்ற எண்ணமும் இளைஞர்களிடம் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement