இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடரின் 2 போட்டிகளையும் வெல்ல இந்தியா முயற்சிக்க உள்ளது. முன்னதாக இந்தியாவில் இயற்கையாகவே சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருப்பது வழக்கமாகும்.
அதனாலேயே தங்களுடைய பலமான சுழலை வைத்து 2012க்குப்பின் தொடர்ந்து சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காமல் இந்தியா உலக சாதனை படைத்து வந்தது. இருப்பினும் சமீப காலங்களாகவே இந்தியாவில் நடைபெறும் பெரும்பாலான டெஸ்ட் போட்டிகள் 2 – 3 நாட்களுக்குள் முடிந்தது.
இனிமேல் 2 – 3 நாளில் முடியாது:
அதற்கு சொந்த மண்ணில் வெல்வதற்காக இந்தியா வேண்டுமென்றே சுழலுக்கு சாதகமான மைதானங்கள் அமைப்பதாக மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் வெளிநாட்டு வீரர்கள் விமர்சித்தனர். கடைசியில் அது இந்தியாவுக்கே பெரிய பாதகமாக அமைந்தது. ஏனெனில் 2024இல் நியூசிலாந்துக்கு எதிராக சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் மோசமாக பேட்டிங் செய்த இந்தியா 3 – 0 (3) கணக்கில் வரலாறு காணாத ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது.
அதனால் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் ஒரு தொடரில் தோற்ற இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது. இந்நிலையில் இனிமேல் இந்தியாவில் எந்த போட்டியும் பிட்ச் காரணமாக 2 – 3 நாட்களில் முடியாது என்று கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். ஏனெனில் தாங்களே விரும்பவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
சுப்மன் கில் உறுதி:
“நாங்கள் 2 – 3 நாட்களில் வெல்ல விரும்பவில்லை. எங்களிடம் குல்தீப், ஜடேஜா, அக்சர், சுந்தர் ஆகிய 4 ஸ்பின்னர்கள் உள்ளனர். இந்தியாவுக்கு வரும் எந்த அணிகளுக்கும் சுழல் மற்றும் ஸ்விங் ஆகிய 2 சவால் இருக்கும் என்பது தெரியும். அந்த 2 சவால்களிலும் நாங்கள் எதிரணியை சோதிப்போம். அதே சமயம் எங்கள் கவனம் நல்ல கிரிக்கெட்டில் இருக்கும். நாங்கள் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் விளையாடி நீண்ட நாளாகி விட்டது”
இதையும் படிங்க: வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் செய்த மிகப்பெரிய தவறு.. இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றிபெற வாய்ப்பு – விவரம் இதோ
“நாங்கள் எதில் சிறந்தவர்கள், எதை வைத்து எங்களை சாய்க்க வேண்டும் என்பது எதிரணிகளுக்கும் தெரியும். அது போன்ற பிட்ச்சுகளில் ஸ்பின்னர்கள் 90 – 95 கி.மீ வேகத்தில் வீசினால் உலகின் எந்த பேட்ஸ்மேன்களும் தடுமாறுவார்கள். நியூஸிலாந்து (2024இல்) இங்கே வருவதற்கு முன் அந்த அனுபவத்தைப் இலங்கையில் விளையாடி பெற்றது. எங்களால் பெற முடியவில்லை. 2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை விட நாங்கள் ஒவ்வொரு தொடரை வெல்வதைப் பற்றி பேசுகிறோம். ஆனால் வலுவான இந்தியா மீண்டும் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் போனால் அது ஏமாற்றமளிக்கும்” என்று கூறினார்.



