53 ரன்கள் அடிச்சும் திருப்தி இல்லை – வெற்றிக்கு பின் தம்முடைய பேட்டிங் பற்றி ரோஹித் சர்மா கவலை

Rohit-Sharma
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை முத்தமிடும் லட்சியத்தில் களமிறங்கியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின் அபார ஆட்டத்தால் அசாத்தியமான வெற்றியை பதிவு செய்து தோற்கடித்தது. அந்த வரலாற்று வெற்றியால் பெற்ற புத்துணர்ச்சியுடன் அக்டோபர் 27ஆம் தேதியன்று கத்துக்குட்டி நெதர்லாந்தை தன்னுடைய 2வது போட்டியில் எதிர்கொண்ட இந்தியா 56 ரன்கள் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றி பெற்றது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 179/2 ரன்கள் சேர்த்தது.

IND vs NED Rohit Sharma Axar Patel KL Rahul

- Advertisement -

தொடக்க வீரர் ராகுல் ஆரம்பத்திலேயே 9 ரன்களில் நடையை கட்டினாலும் அடுத்து களமிறங்கிய விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரோகித் சர்மா 4 பவுண்டரி 3 சிக்ஸருடன் 53 (39) ரன்கள் எடுத்து அவுட்டானார். அவருக்குப் பின் களமிறங்கிய சூரியகுமாருடன் ஜோடி சேர்ந்த விராட் கோலி தனது பங்கிற்கு கடைசி வரை அவுட்டாகாமல் 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டர் 2 சிக்ஸருடன் 62* (44) ரன்கள் எடுத்தார். அவருடன் கைகோர்த்து அவரைவிட அட்டகாசமாக பேட்டிங் செய்த சூரியகுமார் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 51* (25) ரன்கள் குவித்து பினிஷிங் செய்தார்.

திருப்தி இல்லை:
அதை தொடர்ந்து 180 ரன்களை துரத்திய நெதர்லாந்து இந்தியாவின் தரமான பந்து வீச்சில் ஆரம்பம் முதலே தடுமாறி 20 ஓவர்களில் 123/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டிம் பிரிங்கள் 20 (15) ரன்கள் எடுக்க இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் பட்டேல், அர்ஷிதீப் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர். இந்த அசத்தலான வெற்றியால் குரூப் 2 புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளை பெற்றுள்ள இந்தியா முதலிடத்தில் ஜொலிப்பதுடன் நாக்-அவுட் சுற்று வாய்ப்பையும் கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது.

Rohit Sharma IND vs NED

முன்னதாக சமீப காலங்களில் கேப்டனாக முன்னின்று பேட்டிங் துறையில் ரன்களை சேர்க்க வேண்டிய தொடக்க வீரர் ரோகித் சர்மா சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மீண்டும் வெறும் 4 ரன்னில் அவுட்டாகி பெரிய பாரத்தை ஏற்படுத்தினார். அதனால் விமர்சனங்களை சந்தித்த அவர் இப்போட்டியில் 53 (39 ரன்களைக் குவித்தது மட்டுமல்லாமல் டி20 உலக கோப்பையில் அதிக சிக்ஸர்கள் (34) அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற யுவராஜ் சிங் (33) சாதனையும் உடைத்தார்.

- Advertisement -

ஆனாலும் தம்முடைய பேட்டிங்கில் திருப்தியளிக்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இந்த ரன்கள் தம்முடைய நம்பிக்கையை மட்டும் சற்று உயர்த்தியுள்ளதாக கூறியுள்ளார். இப்போட்டியில் 53 ரன்களை எடுத்தாலும் 23 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச்சை நெதர்லாந்து தவறவிட்டதை பயன்படுத்திய அவர் அரை சதமடித்தார். அதனாலேயே திருப்தியடையாத அவர் போட்டி முடிந்த பின் இது பற்றி பேசியது பின்வருமாறு.

Rohit

“பாகிஸ்தானுக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க ஸ்பெஷல் வெற்றியை தொடர்ந்து சில நாட்கள் ஓய்வுக்கு பின் இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது எங்களுக்கு அதிர்ஷ்டமாகும். பாகிஸ்தானுக்கு எதிரான அந்த ஸ்பெஷல் போட்டி முடிந்ததும் உடனடியாக சிட்னி வந்த நாங்கள் இப்போட்டிக்கு தயாரானோம். மேலும் இந்த போட்டியில் கவனம் செலுத்தி 2 புள்ளிகளை பெற வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அந்த வகையில் இது கச்சிதமான வெற்றியாகும். அதே சமயம் முதல் சுற்றில் போராடி சூப்பர் 12 சுற்று வரை வந்துள்ள நெதர்லாந்துக்கும் பாராட்டுக்கள். அதனால் எப்போதும் நாங்கள் எதிரணியை குறைத்து மதிப்பிடாமல் ஒரே மாதிரியாகவே தயாராகிறோம்”

“உண்மை சொல்ல வேண்டுமெனில் இதுவும் கச்சிதமான வெற்றிக்கு சற்று குறைவானது. எங்களுடைய பேட்டிங்கில் ஆரம்பம் மெதுவாக இருந்தாலும் மைதானத்திற்கு ஏற்றார் போல் பொறுமையாக நின்று அதிரடி காட்ட வேண்டும் என்று விராட் கோலியிடம் நான் பேசினேன். ஆனால் என்னுடைய அரை சதத்தால் எனக்கு மகிழ்ச்சியில்லை. இருப்பினும் இதுபோன்ற குறைவான ரன்களாக இருந்தாலும் அதிக ரன்களாக இருந்தாலும் வெற்றிக்கான ரன்களை நீங்கள் எடுப்பது முக்கியம். அந்த வகையில் இப்போட்டியில் அடித்த ரன்கள் என்னுடைய தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது” என்று கூறினார்.

Advertisement