இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் மூன்றாம் நாளான இன்று இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் விளையாடிய வேளையில் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்துள்ளது. இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் :
3 ஆவது இந்திய வீரராக நிதீஷ் ரெட்டி நிகழ்த்திய சாதனை :
ரிஷப் பண்ட் 28 ரன்களிலும், ரவீந்திர ஜடேஜா 17 ரன்களிலும் ஆட்டமிழந்த வேளையில் எட்டாவது வீரராக களம் இறங்கிய நிதீஷ் குமார் ரெட்டி நிலைத்து நின்று ஆடி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவுவரை ஆட்டம் இழக்காமல் 176 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 105 ரன்கள் குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.
நிதீஷ் குமார் ரெட்டியின் இந்த பொறுப்பான ஆட்டம் காரணமாக இந்திய அணி பாலோ ஆனை தாண்டியது மட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா அணியின் ஸ்கோர்க்கு சற்று நெருக்கமாக கொண்டு சென்றுள்ளது.
அவரது இந்த பிரமாதமான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளதோடு ஆஸ்திரேலியா மண்ணில் மூன்றாவது இந்திய வீரராகவும் ஒரு சாத்னையை நிகழ்த்தியதற்கான பெருமையை பெற்றுக் கொடுத்துள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலிய மண்ணில் மிக இளம் வயதில் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரராக நிதீஷ்குமார் ரெட்டி சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக கடந்த 1992-ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தனது 18 வயது 256-ஆவது நாளில் ஆஸ்திரேலியா மண்ணில் சதம் அடித்திருந்தார். அவருக்கு அடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் தனது 21-வது வயது 92-வது நாளில் சதம் அடித்திருந்தார்.
இதையும் படிங்க : கும்ளே மற்றும் ஹர்பஜன் ஆகியோரை தொடர்ந்து நிதீஷ் மற்றும் சுந்தர் ஆகியோர் நிகழ்த்திய சாதனை – விவரம் இதோ
அவர்கள் இருவரை தொடர்ந்து தற்போது மூன்றாவது வீரராக 21 வயது 216-நாளில் நிதீஷ்குமார் ரெட்டி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் சதத்தை விளாசி மிக குறைந்த வயதிலேயே ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.