ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக நித்திஷ் ரெட்டி சதமடித்தது ரசிகர்களின் நெஞ்சை தொட்டது. ஏனெனில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் அந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 474 ரன்கள் எடுத்தது. அடுத்ததாக விளையாடிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 82 ரன்கள் எடுத்த போதிலும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட மற்ற வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.
அதனால் 221-7 என தடுமாறிய இந்திய அணிக்கு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருடன் சேர்ந்த நித்திஷ் ரெட்டி நங்கூரமாக அபாரமான ஆட்டத்தை விளையாடினார். அந்த வகையில் 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் தனது முதல் சதத்தை அடித்து 114 ரன்கள் எடுத்தார். அதனால் ஃபாலோ ஆன் அவமானத்திலிருந்து தப்பிய இந்தியா வெற்றிக்காக போராடி வருகிறது.
காலில் விழுந்த அப்பா:
மேலும் ஆஸ்திரேலிய மண்ணில் 8வது இடத்தில் சதத்தை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நித்திஷ் ரெட்டி படைத்தார். அத்துடன் மெல்போர்ன் மைதானத்தில் 8வது இடத்தில் களமிறங்கி சதத்தை அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்தார். அவருடைய ஆட்டத்தை மைதானத்தில் இருந்து நேரில் பார்த்த நிதிஷ் ரெட்டியின் அப்பா ஆனந்தக் கண்ணீர் விட்டார்.
அவரை ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் மைதானத்தில் நேரடியாக சென்று பேட்டி எடுத்தார். அதைத் தொடர்ந்து முன்னாள் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் நித்திஷ் ரெட்டியின் தந்தையை சந்தித்தார். அப்போது நித்திஸ் ரெட்டியின் அப்பா முட்யலு ரெட்டி வயதில் மூத்தவர் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்ற முறையில் அவருடைய கால்களில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார்.
வாழ்த்திய கவாஸ்கர்:
அவரை ஆசீர்வதித்த கவாஸ்கர் தெரிவித்தது பின்வருமாறு. “நீங்கள் எவ்வளவு தியாகத்தை செய்துள்ளீர்கள் என்பது எங்களுக்கு தெரியும். உங்களால் நான் ஆனந்த கண்ணீர் விட்டேன். உங்களால் இந்தியாவுக்கும் இந்திய கிரிக்கெட்டுக்கும் வைரத்தை போன்ற வீரர் கிடைத்துள்ளார்” எனக் கூறினார்.
இதையும் படிங்க: வெறும் 2 விக்கெட்ஸ்.. பாகிஸ்தானை த்ரில்லாக வீழ்த்தி சாதனை படைத்த தெ.ஆ.. இந்தியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி
அதாவது நித்திஷ் ரெட்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக சிறுவயதிலேயே தனது வேலையை அவரது தந்தை விட்டார். பின்னர் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தேவையான பயிற்சிகள் கிடைக்கும் ஹைதராபாத் நகருக்கு அவர் குடி பெயர்ந்தார். அங்கு தன்னுடைய மகனுக்கு போதுமான வசதிகளையும் ஆதரவுகளையும் தந்தையாக அவர் செய்து கொடுத்தார். அதை பயன்படுத்தி இன்று நித்திஷ் ரெட்டி இந்திய அணிக்கு வைரத்தை போன்ற வீரராக கிடைத்துள்ளதாக கவாஸ்கர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



