ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனது அட்டகாசமான ஆல்ர்வுண்டர் செயல்பாட்டை வெளிப்படுத்திய 21 வயதான நிதீஷ்குமார் ரெட்டிக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பலரது மத்தியிலும் ஆதரவுகள் குவிந்த வேளையில் கடந்த ஆண்டு அவருக்கு டி20 போட்டிகளில் அறிமுக வாய்ப்பு கிடைத்து மூன்று போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதம் உட்பட 90 ரன்களை குவித்து அசத்தியிருந்தார்.
நேர்த்திக்கடன் செலுத்திய இந்திய வீரர் நிதீஷ் ரெட்டி :
அதேவேளையில் அண்மையில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணியானது அங்கு நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி ஒன்றுக்கு மூன்று (1-3) என்ற கணக்கில் தொடரை இழந்ததோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பையும் இழந்தது.
இந்த ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமான நிதீஷ் ரெட்டி 5 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி ஒரு சதம் உட்பட 298 ரன்கள் குவித்து அசத்தினார். குறிப்பாக மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் போது அவர் அடித்த சதம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது.
மேலும் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய வீரர்கள் சார்பாக அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் பெற்ற அவர் இனி இந்திய டெஸ்ட் அணியின் நிரந்தர வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக இடம்பிடிப்பார் என்றும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தனது அறிமுக டெஸ்ட் தொடரிலேயே அசத்திய அவரின் வாழ்க்கையே தலைகீழாக மாறிய நிலையில் தான் வேண்டிக்கொண்டபடி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று நிதீஷ்குமார் ரெட்டி நேர்த்திக்கடனையும் செலுத்தியுள்ளார். அந்த வகையில் ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து நாடு திரும்பிய நிதீஷ்குமார் ரெட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முட்டி போட்டு படி ஏறி சாமி தரிசனம் செய்தார்.
இதையும் படிங்க : இனி உங்க இஷ்டத்துக்கு சம்பளம் கிடையாது.. மீண்டும் இந்திய வீரர்களுக்கு செக் வைத்த பி.சி.சி.ஐ – விவரம் இதோ
இது குறித்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. எதிர்வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்துள்ள அவர் நிச்சயம் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.



