இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய 21 வயதான நிதீஷ் குமார் ரெட்டி இந்த தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 303 ரன்களை அடித்ததோடு பந்துவீச்சிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அந்த அணி இறுதிப் போட்டி வரை செல்வதற்கு மிக முக்கியமான காரணமாக இருந்தார்.
இதன் காரணமாக அவரை அடுத்த ஹார்டிக் பாண்டியாவாக மாற்ற வேண்டும் என்றும் அதற்கான பயிற்சியை விரைவில் பிசிசிஐ துவங்க வேண்டும் என்று விமர்சகர்கள் அப்போதே கூறியிருந்தனர். ஆனால் நிதீஷ் ரெட்டி இடமிருந்த ஆல்ரவுண்டர் திறமையை கண்ட தேர்வுக்குழு அவருக்கு உடனடியாக ஜெம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு வழங்கியது.
இருப்பினும் கடைசி நேரத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஜிம்பாப்வே பயணிக்க முடியாமல் போனது. இந்நிலையில் இப்படி இந்திய அணிக்கு தேர்வானது குறித்தும் தனது ஆரம்பகட்ட கிரிக்கெட் வாழ்வில் தான் சந்தித்த சிரமங்கள் குறித்தும் தற்போது நிதீஷ்குமார் ரெட்டி பல்வேறு விடயங்களை பகிர்ந்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சிறுவயதில் நான் கிரிக்கெட் பயிற்சியை துவங்கிய போது எனது அப்பாவிற்கு ராஜஸ்தானுக்கு பணி மாற்றம் கிடைத்தது. ஆனால் எனது அப்பா என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்காக அவருடைய அரசு வேலையையே ராஜினாமா செய்து விட்டு எங்களோடு ஆந்திராவில் இருக்க முடிவு செய்தார்.
அப்போது எனது அப்பா எடுத்த அந்த முடிவை உறவினர்கள் மற்றும் பலரும் சரியல்ல என்று கூறி என் முன்னே திட்டினார்கள். ஆனால் எதையும் எதிர்பார்க்காமல் எனது கிரிக்கெட்டுக்காக என் அப்பா என்னுடன் நின்றார். இன்று நான் ஐபிஎல் விளையாடி இந்திய அணிக்கு தேர்வானதில் மகிழ்ச்சி அடைந்த முதல் ஆள் என் தந்தை தான்.
இதையும் படிங்க : ஜான்டி ரோட்ஸை ஃபீல்டிங் பயிற்சியாளராக பரிந்துரைத்த கம்பீர்.. உடனே மறுத்த பிசிசிஐ.. காரணம் என்ன?
என்னையும் என் தந்தையும் திட்டிய உறவினர்கள் பலரும் தற்போது நேரில் வந்து விருந்துக்கு அழைக்கிறார்கள். எனது அப்பா இழந்த சுயமரியாதை மீட்டு எடுத்துள்ளார். காயம் காரணமாக தற்போது இந்திய அணியில் விளையாட முடியவில்லை என்றாலும் மீண்டும் நிச்சயம் இந்திய அணிக்கு தேர்வாவேன் என நிதீஷ் குமார் ரெட்டி கூறியது குறிப்பிடத்தக்கது.



