இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நாளை நவம்பர் 14-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற இருப்பதினால் இரு அணிகளைச் சேர்ந்த வீரர்களும் தற்போது கொல்கத்தா சென்றடைந்து தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய டெஸ்ட் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட நட்சத்திர வீரர் :
இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட இந்திய டெஸ்ட் அணியில் சுப்மன் கில் தலைமையில் 15 வீரர்களுக்கு இடம் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து இந்திய அணியை சேர்ந்த நட்சத்திர வீரர் ஒருவர் வெளியேற்றப்பட்டு 14 வீரர்கள் மட்டுமே அணியில் இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதீஷ் ரெட்டி இந்த தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருந்தாலும் முதல் போட்டியில் அவருக்கு பதிலாக துருவ் ஜுரேல் விளையாடுவார் என்று ஏற்கனவே மறைமுகமாக தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக துருவ் ஜுரேல் முழுநேர பேட்ஸ்மேனாக பிளேயிங் லெவனில் களமிறங்க உள்ளதால் நிதீஷ் ரெட்டி அதிரடியாக அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அதற்கு காரணம் யாதெனில் : இந்திய ஏ அணியானது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற இருக்கும் ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய ஏ அணியில் நிதீஷ் ரெட்டி விளையாடுவார் என்பதனாலே அவர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெற மாட்டார் என்பதனாலேயே இந்த திடீர் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : 15.4 ஓவரிலேயே 141 ரன்ஸ்.. 18க்கு 18.. டுனிடின் கோட்டையில் வெ.இ’ஸை அசால்ட்டாக சாய்த்த நியூஸிலாந்து வெற்றி
திலக் வர்மா தலைமையிலான இந்திய ஏ அணியானது தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக விளையாட இருக்கும் நிலையில் தற்போது கொல்கத்தாவிலிருந்து நிதீஷ் ரெட்டி ராஜ்கோட் நகருக்கு சென்றடைந்துள்ளார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தியா ஏ மற்றும் தென்னாப்பிரிக்கா ஏ அணிகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமற்ற முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 1:30 மணிக்கு துவங்கவுள்ளது.



