பாகிஸ்தான் அணி தங்களுடைய சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் இந்தத் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 8ஆம் தேதி லாகூரில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 50 ஓவரில் அதிரடியாக விளையாடி 330-6 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 58, டேரில் மிட்சேல் 81 ரன்கள் குவித்து அசத்தினார்கள். அவர்களை விட 6வது இடத்தில் களமிறங்கிய கிளன் பிலிப்ஸ் 72 பந்துகளில் சதத்தை அடித்து 6 பவுண்டரி 7 சிக்ஸருடன் 106 (74) ரன்கள் விளாசி பாகிஸ்தானை நொறுக்கினார். அதன் வாயிலாக பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 6 அல்லது அதற்கு கீழே களம் இறங்கி சதத்தை அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
பிலிப்ஸ் சாதனை:
இதற்கு முன் 2019ஆம் ஆண்டு இலங்கையின் சினேஹன் ஜெயசூர்யா அதிகபட்சமாக 96 ரன்கள் அடித்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோர். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 3 விக்கெட்டுகள் எடுத்தாலும் 88 ரன்கள் வாரி வழங்கினார். பின்னர் 331 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு ஃபகார் ஜமான் அதிரடியாக விளையாடினார்.
ஆனால் எதிர்ப்புறம் பாபர் அசாம் 10, கம்ரான் குலாம் 18, கேப்டன் முகமது ரிஸ்வான் 3 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்கள். மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஜமான் அரை சதத்தை கடந்து 84 (69) ரன்கள் விளாசி அச்சுறுத்தலைக் கொடுத்த போது கிளன் பிலிப்ஸ் அவுட்டாக்கினார். அதனால் அழுத்தத்தை சந்தித்த பாகிஸ்தான் அணிக்கு மிடில் ஆர்டரில் சல்மான் ஆகா 40, தாயாப் தாஹிர் 30, அப்ரார் அஹ்மத் 23* ரன்கள் எடுத்துப் போராடினார்கள்.
ரசிகர்கள் பிராத்தனை:
ஆனால் அவர்களில் யாரும் ஃபினிஷிங் செய்யாததால் 47.5 ஓவரில் 252 ரன்களுக்கு பாகிஸ்தானை சுருட்டிய நியூசிலாந்து 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் மிட்சேல் சான்ட்னர் 3, மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அதனால் புள்ளிப்பட்டியலிலும் 2 புள்ளிகளைப் பெற்று நியூசிலாந்து இத்தொடரில் அசத்தத் துவங்கியுள்ளது.
இதையும் படிங்க: 155 ரன்ஸ்.. 31 சதங்கள்.. ரோஹித் ஃபார்மில் இல்லன்னு யார் சொன்னா? பேட்டிங் கோச் ஆதாரத்துடன் ஆதரவு
முன்னதாக இந்தப் போட்டியில் 38வது ஓவரில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் கொடுத்த கேட்ச்சை இளம் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்தரா பிடிக்க முயற்சித்தார். அப்போது துரதிஷ்டவசமாக கேட்ச்சை விட்ட அவருடைய முகத்தில் பந்து பட்டது. அதனால் அவருடைய முகத்தில் ரத்தம் வந்ததால் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்கிறார்கள்.



