ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. அத்தொடரில் லீக் சுற்றில் ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இந்தியா ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்தது. இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிரான வாழ்வா – சாவா போட்டியில் அபார வெற்றி பெற்ற இந்தியா செமி ஃபைனலுக்கு சென்று அசத்தியது.
அங்கே 7 முறை உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 339 ரன்களை சேசிங் செய்த இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அத்துடன் ஐசிசி உலகக் கோப்பை நாக் அவுட் போட்டியில் 300+ ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணி என்ற உலக சாதனையையும் இந்தியா படைத்தது. அடுத்து நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா முதல் முறையாக மகளிர் உலகக் கோப்பையை வென்று புதிய சரித்திரம் படைத்தது.
இந்தியா சாம்பியன்:
அதன் வாயிலாக 3 தோல்விகளை சந்தித்த பின்பும் மகளிர் உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற உலக சாதனையையும் இந்தியா படைத்தது. இந்நிலையில் சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடிய இந்தியா கோப்பையை வெல்வதற்கு தகுதியான அணி என்று நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லுக்சன் தெரிவித்துள்ளார். அதை விட ஆஸ்திரேலியாவை செமி ஃபைனலில் தோற்கடித்து இந்தியா வீட்டுக்கு அனுப்பியது தங்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடிய இறுதிப் போட்டியின் ஹைலைட்ஸை நான் நேற்றிரவு பார்த்தேன். அவர்களுக்கு நான் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். மிகவும் சிறப்பாக விளையாடிய உலகத்தரம் வாய்ந்த அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள். நாங்கள் நியூசிலாந்து வெற்றி பெறுவதை விரும்பினோம்”
வாழ்த்திய நியூஸிலாந்து பிரதமர்:
“இருப்பினும் அவர்கள் முதல் முறையாக கோப்பையை வென்றதற்காக நாங்களும் பெருமைப்படுகிறோம். ஒருவர் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்கும் வரை அவர்கள் மேலே நாங்கள் அக்கறை கொள்வோம். அதைத்தான் நீங்கள் செய்துள்ளீர்கள் நண்பர்களே” என்று மகிழ்ச்சியாக தெரிவித்தார். பொதுவாக இந்தியா – பாகிஸ்தான் மக்கள் ஒருவரை ஒருவர் வீழ்த்த வேண்டும் என்று நினைப்பார்கள்.
இதையும் படிங்க: சன் ரைசர்ஸ் அணியிலிருந்து வெளியேற்றப்பட இருக்கும் நட்சத்திர வீரர்.. மினி ஏலத்தில் நடக்கவுள்ள போட்டி – விவரம் இதோ
அதே போல நியூசிலாந்தின் பக்கத்து நாடான ஆஸ்திரேலியாவை வீழ்த்த வேண்டும் என்பது அந்நாட்டவர்களின் விருப்பமாகும். ஆஸ்திரேலியா – நியூஸிலாந்து மோதலை டிரான்ஸ் – டாஸ்மான் என்று அழைப்பது வழக்கமாகும். அந்த வகையில் தங்களுடைய எதிரியான ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்திய அணி நாக் அவுட் செய்தது மகிழ்ச்சியளிப்பதாக நியூசிலாந்து பிரதமர் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது



