வரலாறு காணாத நிகழ்வு. நெதர்லாந்திடம் வீழ்ந்த தெ.ஆ – இந்தியாவுடன் அரையிறுதிக்கு செல்லப்போகும் அணி எது?

NED vs SA
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத த்ரில்லர் திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் நவம்பர் 6ஆம் தேதியன்று நடைபெற்ற 40வது லீக் போட்டியில் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்த நெதர்லாந்தை நிச்சயம் தோற்கடிக்க வேண்டிய கட்டாயத்தில் தென்னாப்பிரிக்கா எதிர்கொண்டது. அதிலும் ஏற்கனவே 4 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து 5 புள்ளிகளை பெற்ற தென்னாப்பிரிக்கா வலுவான அணியாக திகழ்வதால் எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த நிலையில் அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நெதர்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அசத்தலாக செயல்பட்டு 158/4 ரன்கள் சேர்த்தது.

அந்த அணிக்கு 58 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஸ்டீபன் மைபர்க் 7 பவுண்டரியுடன் 37 (30) ரன்களில் அவுட்டாக அவருடன் அசத்தலாக பேட்டிங் செய்த மேக்ஸ் ஓ’தாவுத் 29 (31) ரன்களில் ஆட்டமிழந்தார். அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் டாம் கூப்பர் 2 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 35 (19) ரன்களில் அவுட்டானாலும் அக்கர்மேன் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 41* (26) ரன்களும் கேப்டன் எட்வர்ட்ஸ் 2 பவுண்டரி 12* (7) ரன்களும் விளாசி பினிஷிங் கொடுத்தனர். தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

சோக்கர் தென் ஆப்பிரிக்கா:
அதை தொடர்ந்து 159 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்கா ஆரம்ப முதலே துல்லியமாக பந்து வீசிய நெதர்லாந்தின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. குறிப்பாக அதிரடி காட்ட வேண்டிய குயின்டன் டீ காக் 13 (13) கேப்டன் பாவுமா 20 (20) ரிலீ ரோசவ் 25 (19) ஐடன் மார்க்ரம் 17 (13) என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 90/4 என தடுமாறிய அந்த அணியை எளிதாக காப்பாற்றி விடுவார் என்று கருதப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் 17 (17) ஹென்றிச் க்ளாஸென் 21 (18) வேன் பர்ணல் 0 (2) கேசவ் மகாராஜ் 13 (12) என முக்கிய லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் தேவையான ரன்களை எடுக்காமல் அவுட்டாகி மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தனர்.

அதனால் 20 ஓவரில் எவ்வளவோ போராடியும் 145/8 ரன்கள் மட்டுமே எடுத்த தென்னாப்பிரிக்கா வெறும் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று அந்நாட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்தது. வரலாற்றில் காலம் காலமாக உலகக் கோப்பை என்றாலே தென்னாப்பிரிக்கா இது போன்ற முக்கிய தருணங்களில் சொதப்பும் என்பதாலேயே அந்த அணியை சோக்கர் என்று அழைப்பார்கள். அது மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் நெதர்லாந்து செய்த இந்த பங்கம் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமாக அமைந்தது.

- Advertisement -

ஏனெனில் 3 மற்றும் 5வது இடங்களில் உள்ள அந்த அணிகள் தற்போது அதே அடிலெய்ட் மைதானத்தில் மோதி வருகின்றன. அந்த போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இந்தியாவுடன் செமி ஃபைனலுக்கு தகுதி பெறும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 127/8 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அதை எளிதாக சேசிங் செய்து பாகிஸ்தான் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் ஒரு கட்டத்தில் கதை முடிந்ததாக கருதப்பட்ட பாகிஸ்தான் கடைசி நேரத்தில் நெதர்லாந்து செய்த மாயாஜாலத்தால் இந்தியாவுடன் அரையிறுதிக்கு கெத்தாக தகுதி பெற தயாராகியுள்ளது. அதே சமயம் தென் ஆப்பிரிக்கா வெளியேறியதால் இன்று மாலை நடைபெறும் போட்டியில் ஜிம்பாப்வேவை சந்திக்காமலேயே இந்தியா அரையிறுதிக்கு 3வது அணியாக தகுதி பெற்று அசத்தியுள்ளது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement