- Advertisement -
இந்திய கிரிக்கெட்

55/3 டூ 238/6.. 143 ரன்ஸ்.. தனியாளாக இந்தியாவை தூக்கிய மந்தனா 3 புதிய சாதனை.. தெ.ஆ அணிக்கு எதிராக அபார வெற்றி

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. அந்தத் தொடரின் முதல் போட்டி ஜூன் 16ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஷபாலி வர்மா 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அடுத்ததாக வந்த ஹேமலதாவும் 12 ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஹர்மன்பிரித் கௌர் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் 55/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்திய அணிக்கு மறுபுறம் மற்றொரு நட்சத்திர துவக்கம் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா நங்கூரமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் ஜெமிமா ரோட்டரிகஸ் 17, ரிச்சா கோஸ் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

மந்தனா சாதனை:
இருப்பினும் தொடர்ந்து எதிர்ப்புறம் தென்னாபிரிக்காவுக்கு சவாலை கொடுத்த மந்தனா அரை சதமடித்து போராடினார். அவருடன் சேர்ந்து 6வது விக்கெட்டுக்கு 81 ரன்கள் பாரமன்ஷிப் அமைத்த தீப்தி சர்மா தம்முடைய பங்கிற்கு 37 ரன்கள் குவித்து அசத்தினார். அடுத்த சில ஓவரிலேயே சதமடித்த மந்தனா 12 பவுண்டரி 1 சிக்சருடன் 117 (127) ரன்கள் குவித்து அவுட்டானார்.

குறிப்பாக 55/3 என தடுமாறிய இந்தியாவை தனியாளாக சதமடித்து தூக்கிய அவர் 238/6 என்ற நல்ல நிலைக்கு கொண்டு வந்து அவுட்டானார். இறுதியில் பூஜா வஸ்திரக்கார் 31* ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் இந்தியா 265/8 ரன்கள் எடுத்தது. தென்னாபிரிக்கா சார்பில் அதிகபட்சமாக அயபோங்கா காகா 3, க்ளாஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதைத் தொடர்ந்து 226 ரன்கள் துரத்திய தென்னாபிரிக்கா ஆரம்பம் முதலே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் தாக்குபிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது.

- Advertisement -

அதனால் 37.4 ஓவரிலேயே அந்த அணியை 122 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென்னாபிரிக்காவுக்கு முக்கிய வீராங்கனைகள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக சுனே லஸ் 33 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஆசா ஷோபனா 4, தீப்தி சர்மா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்தியாவின் இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி சதமடித்து முக்கிய பங்காற்றிய மந்தனா ஆட்டநாயகி விருதை வென்றார்.

அத்துடன் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் (117) பதிவு செய்த இந்திய வீராங்கனை என்ற மிதாலி ராஜ் (109, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக) சாதனையை உடைத்த மந்தனா புதிய சாதனை படைத்தார். மேலும் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த 2வது இந்திய வீராங்கனை என்ற சாதனையும் அவர் படைத்தார்.

இதையும் படிங்க: ஆஸியா இது? இங்கிலாந்தை வீட்டுக்கு அனுப்ப முடிந்தவரை போராடிய ஆஸ்திரேலியா.. மோசமான உலக சாதனை

இதற்கு முன் ஹர்மன்ப்ரீத் 5 சதங்கள் அடித்திருந்த நிலையில் தற்போது மந்தனா 6 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். முதலிடத்தில் மிதாலி (7 சதங்கள்) உள்ளார். அது போக சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் மிதாலிக்கு பின் 7000 ரன்கள் அடித்த 2வது இந்திய வீராங்கனையாகவும் மந்தனா புதிய சாதனை படைத்தார்.

- Advertisement -