இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் தொடரில் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான இறுதிப் போட்டி தற்போது பிரிஸ்பன் மைதானத்தில் இன்று 15ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. கடந்த போட்டியின்போது காயம் ஏற்பட்ட இந்திய வீரர்களான அஸ்வின், விகாரி, பும்ரா மற்றும் ஜடேஜா ஆகியோர் இந்த போட்டியில் விளையாடவில்லை, இதனால் இந்திய அணியில் நான்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்திய அணியில் உள்ள மாற்றங்களை டாஸ் நிகழ்விற்கு பிறகு தெரிவித்த ரஹானே இந்திய அணியில் காயமடைந்த 4 வீரர்களுக்கு பதிலாக அகர்வால், சுந்தர், நடராஜன் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியில் விளையாடுவார்கள் என்று தெரிவித்தார்.
அதன்படி டாஸ் வென்று இந்த போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் குவித்தது. கேமரோன் கிரீன் 28 ரன்களுடனும், டிம் பெயின் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி சார்பாக நடராஜன் 2 விக்கெட்டுகளையும், சிராஜ் சுந்தர் மற்றும் தாகூர் ஆகியோர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
இந்நிலையில் இந்தப் போட்டியின் போது 36ஆவது ஓவரை வீசிய இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனி அந்த ஓவரின் 5-வது பந்தினை வீசிய பின்னர் தொடைப்பகுதியில் சற்று தசைப்பிடிப்பை உணர்ந்தார். உடனே வலியால் துடித்த அவர் மைதானத்திலேயே கீழே விழுந்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். அதனை கண்ட அணியின் பிசியோ நேரடியாக களத்தில் வந்து அவரை சோதித்ததில் தொடை பகுதியில் பிடிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்து அவரை பெவிலியனுக்கு அழைத்துச் சென்றார்.
போட்டியின் பாதியில் திரும்பிய அவர் அதன் பின்னர் மீண்டும் பந்துவீச வரவில்லை. அவரை ஸ்கேன் செய்ய அனுப்பி இருப்பதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் பல வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் நடைபெற்று இருக்கும் இவ்வேளையில் சைனியின் காயமும் இந்திய அணிக்கு ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.