இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த தொடரை இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரின் வெற்றிக்கு முக்கிய காரணமாக தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜனும் இருந்தார் என்றால் அது மிகை அல்ல. ஏனெனில் மூன்று ஆட்டங்களில் வெகு சிறப்பாக பந்து வீசிய அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது திறமையை முதல் தொடரிலேயே சரியாக வெளிப்படுத்தினார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அற்புதமாக பந்து வீசி வரும் நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் இன்னும் பல ஆண்டுகள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்தவுடன் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக அறிமுகமாகும் காரணத்தினால் கோலி அவரிடம் வெற்றி கோப்பையை கொடுத்து கொண்டாட்டத்தில் ஈடுபட செய்தது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மைதானத்தில் இருந்தபடியே அவரை இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிரபல வர்ணனையாளருமான முரளி கார்த்திக் தமிழில் பேட்டி கண்டார். அந்த பேட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அங்கு விளையாடுவது எப்படி இருக்கிறது ? உங்களுடைய முதல் தொடர் குறித்த அனுபவங்கள் என்ன ? என்று முரளி கார்த்திக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு நடராஜன் தமிழிலேயே பதிலளித்தார். அவர் அளித்த பதில் பின்வருமாறு : மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. பலம்வாய்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமாகிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த தொடரில் நாங்கள் வெற்றி பெற்று தற்போது இங்கு நிற்கும் அனுபவத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை, அவ்வளவு சந்தோஷத்தில் இருக்கிறேன். அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்ததும் என்னுடைய வேலையை நாம் சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அணி அணியில் இருந்த மற்ற வீரர்களும் எனக்கு உதவினார்கள்.
என்னுடைய பலம் யார்க்கர் தான் அதை நம்பி நான் விளையாடினேன். மேலும் விக்கெட்டிற்கு ஏற்ற வகையில் கேப்டனிடம் கேட்டுக்கொண்டு மைதானத்தின் நிலை எவ்வாறு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் அட்ஜஸ் செய்து பந்துவீசினேன் என்று நடராஜன் கூறினார். மேலும் அதனை தொடர்ந்து விக்கெட் எடுத்தாலும் சரி அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தாலும் சரி எப்படி நார்மலாக சாந்தமாக இருக்கிறீர்கள் என்று முரளி கார்த்திக் கேட்க அதற்கு பதிலளித்த நடராஜன் கூறியதாவது :
நிறையே பேர் என்கிட்ட இந்த கேள்வியை கேட்டு இருக்காங்க அண்ணா : “சிறு வயதில் இருந்தே நான் அப்படித்தான் அண்ணா” கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த காலத்திலிருந்து நான் பெரிதாக எதற்கும் ஆவேசம் அடைய மாட்டேன். அக்ரெஷன் எல்லாம் சுத்தமா எனக்கு வராது. என்ன நடந்தாலும் ஒரு சிறிய புன்னகையை உதிர்த்து அங்கிருந்து கிளம்பி விடுவேன் என்று நடராஜன் வெகுளியாக பதிலளித்தது தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.