இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் மூன்று வகையான கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் நெட் பவுலராக இடம்பிடித்த நடராஜன் டி20 போட்டிகளில் வருண் சக்கரவர்த்தி அடைந்த காயம் காரணமாகவும், ஒருநாள் போட்டிகளில் நவ்தீப் சைனி அடைந்த காயம் காரணமாகவும் இந்திய அணிக்காக அறிமுகமாகி அசத்தினார். இந்த இரண்டு வகை கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடராஜன் 4 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். சிறப்பான துவக்கத்தை அளித்தது மட்டுமின்றி தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் நெட் பவுலராக செயல்படுவார் என்று பிசிசிஐ அதிகாரபூர்வமாக அறிவித்து அவரை ஆஸ்திரேலியாவில் தங்கவைத்தது இந்நிலையில் தற்போது இந்த டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட பல்வேறு வீரர்களின் தொடர் காயம் காரணமாக நான்காவது போட்டியில் விளையாட தமிழக வீரர்களான நடராஜனுக்கும், சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்படி துவங்கி நடைபெற்று வரும் இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகிய இருவருமே சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் 3வது போட்டியில் அடைந்த காயம் காரணமாக இந்த கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் இருக்கும் அஸ்வின் நேற்று தொகுப்பாளராக மாறி இந்திய அணியின் வீரர்களான சுந்தர், நடராஜன், ஷர்துல் தாகூர் ஆகியோரை பேட்டி கண்டார். அந்த பேட்டியில் நடராஜனிடம் அஸ்வின் நெட் பவுலராக இருந்த நீங்கள் இப்போது நட்டுவாக மாறி ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளீர்கள் இந்த அனுபவம் எப்படி உள்ளது என்று கேட்டார். அதற்கு தமிழிலேயே பதிலளித்த நடராஜன் :
This interaction is all heart ❤️ courtesy @ashwinravi99 & @Natarajan_91
🎙️I am happy at the moment. Never expected to play a Test for India on this tour: Natarajan pic.twitter.com/jhCWksJffS
— BCCI (@BCCI) January 17, 2021
ரொம்ப சந்தோஷமா இருக்கு எனக்கு இதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. டெஸ்ட் போட்டியில் விளையாடுவேன் என்று நான் எதிர்பார்க்கல. நெட் பவுலரா இருந்து முடித்து விட்டு செல்லலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் மூலமா எனக்கு டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று நடராஜன் தமிழிலேயே தனது பதிலை அளித்தார். அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பி.சி.சி.ஐ சேனலுக்கு அஷ்வின் தொகுத்து வழங்கினார்.
இந்த வீடியோ தற்போது பிசிசிஐ அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த போட்டியின்போது தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் மற்றும் தாகூர் ஆகியோர் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஏதாவது ஒரு வடிவத்தில் அறிமுகம் ஆவார் என்று ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு மூன்று வகையான கிரிக்கெட்டிலும் நடராஜன் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.