பும்ராவிற்கு ஏற்பட்ட காயத்தால் நடராஜன் பக்கம் திரும்பிய அதிர்ஷ்ட காற்று – ரசிகர்கள் உற்சாகம்

Nattu-1

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர் என பெரிய சுற்றுப் பயணத்தில் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் மற்றும் டி20 தொடர் ஆகியவை நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று தொடரை சமநிலையில் உள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது.

INDvsAUS

இந்நிலையில் இந்த தொடர் முழுவதுமே இந்தியாவில் கிட்டத்தட்ட பத்து வீரர்களுக்கு மேல் காயமடைந்து அணியில் இருந்து வெளியேறி உள்ளனர். மேலும் வரும் வெள்ளிக்கிழமை துவங்க உள்ள கடைசி போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்வதிலேயே பெரும் சவால் இருக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில் அந்த அளவிற்கு வீரர்கள் காயம் அடைந்து உள்ளனர்.

இதனால் பிரிஸ்பேனில் நடைபெறும் நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஏகப்பட்ட வீரர்கள் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் தற்போது 3வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா, விகாரி மற்றும் பும்ரா ஆகியோர் வெளியேறி உள்ளதால் அவர்களது இடத்தில் விளையாடும் வீரர்களை இந்திய அணி தேர்வு செய்தாக வேண்டும்.

அந்த வகையில் ஜடேஜாவுக்கு பதில் குல்தீப் யாதவ் வாய்ப்பினை பெறுவார். அதேபோன்று விஹாரிக்கு பதிலாக பண்ட் அணியின் பேட்ஸ்மேன் ஆகவும், சகா விக்கெட் கீப்பராக தொடருவார் என்று தெரிகிறது. மேலும் பும்ராவிற்கு ஏற்பட்ட காயத்தினால் தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் இடம்பெற இருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த தகவலினால் ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர். ஏனெனில் பும்ராவிற்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் வாய்ப்பினைப் பெறுவார் என்றும் அதுவே இந்திய அணிக்கு சரியான தீர்வாக இருக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

எனவே இத்தொடரில் நடராஜன் டெஸ்ட் போட்டியிலும் அறிமுக வாய்ப்பினை பெறுவது உறுதியாகி உள்ளது. மேலும் சிராஜ் மற்றும் சைனி ஆகியோர் ஏற்கனவே முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவிற்கு பதிலாக இடம் பெற்றுள்ளதால் நிச்சயம் நடராஜனுக்கு 4வது போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் ஷர்துல் தாகூர் அணியில் வேகப்பந்து வீச்சாளராக அவருடன் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.