
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்ப்ரித் பும்ரா தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் பவுலராக செயல்பட்டு வருகிறார். வித்தியாசமான பௌலிங் ஆக்சனை பயன்படுத்தி துல்லியமான லைன், லென்த்தை பின்பற்றி பவுலிங் செய்யும் அவர் உலகின் அனைத்து டாப் பேட்ஸ்மேன்களையும் திணறடித்து வருகிறார். அந்த வகையில் இந்திய அணியின் பௌலிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் அவர் நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார்.
குறிப்பாக சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் முதல் போட்டியில் கேப்டனாக பும்ரா 8 விக்கெட்டுகளை சாய்த்தார். அதனால் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் தனி ஒருவனாக ஆஸ்திரேலியாவை 294 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடிக்க உதவினார். மேலும் அந்தத் தொடர் முழுவதும் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்ட அவர் 32 விக்கெட்டுகள் சாய்த்தார்.
இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ராவை எளிதாக அடிக்கலாம் என்று குறைத்து மதிப்பிட்டதாக அத்தொடரில் அறிமுகமான ஆஸ்திரேலிய வீரர் நாதன் மெக்ஸ்வீனி கூறியுள்ளார். ஆனால் மிகவும் அபாரமாக பௌலிங் செய்த பும்ரா தம்மையும் திணறடித்து விட்டதாக அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி மெக்ஸ்வீனி பேசியது பின்வருமாறு. “ஆம் ஒருவேளை குறைத்து மதிப்பிட்டதால் அது கடினமான வேலையாக இருந்தது”
“பும்ரா அபாரமான பவுலர். அனேகமாக நான் அப்பாவியாக அவரை எதிர்கொள்வதற்குச் சென்றேன். இதற்கு முன் அவரை எதிர்கொண்டதில்லை. அதனால் அவரை எதிர்கொள்வது நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவர் ஒரு அற்புதமான திறமைக் கொண்ட பவுலர். சரியான இடத்தில் பந்தை பிட்ச் செய்வதில் இடைவிடாத திறனைக் கொண்டிருக்கும் அவரைப் போன்ற ஒருவரை பேட்ஸ்மேனாக நீங்கள் எதிர்கொள்ள விரும்ப மாட்டீர்கள்”
“அந்த வகையில் அவரை எதிர்கொள்வது கடினமான சவாலாக இருந்தது. அதே சமயம் அவருக்கு எதிராக யாருமே வெற்றிகரமாக சிறப்பாக விளையாடியதாகவும் தெரியவில்லை. அவரை எந்த பேட்ஸ்மேனும் எளிதாக அடிக்கவில்லை. எனவே நானும் அவர்களில் ஒருவராக இருந்தேன் என்பது கொஞ்சம் தன்னம்பிக்கையை கொடுக்கிறது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: கபில் தேவ், தோனி மாதிரி இந்திய கிரிக்கெட்டில் ரோஹித் இந்த மாற்றத்தை செஞ்சுருக்காரு.. டிகே பாராட்டு
அந்தத் தொடரில் அறிமுகமான மெக்ஸ்வீனி ஆரம்பம் முதலே பும்ரா போன்ற பவுலர்களிடம் திணறலாக விளையாடி 10, 0, 39, 10*, 9, 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதனால் 3வது போட்டியிலேயே அவரை ஆஸ்திரேலியா வாரியம் கழற்றி விட்டது. மறுபுறம் கடைசி போட்டியில் காயத்தை சந்தித்த பும்ரா அடுத்ததாக 2025 ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுக்க தயாராகி வருகிறார்.