இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா தங்களது சொந்த மண்ணில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா முன்னிலை வகிக்கிறது. இதை அடுத்து இரண்டாவது போட்டி அடிலெய்ட் நகரில் பகல் இரவாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற உள்ளது.
இதற்கு தயாராகும் வகையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய பிரதமர் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா வென்றது. அந்த உத்வேகத்துடன் இரண்டாவது போட்டியிலும் வெற்றி காணும் முனைப்புடன் இந்தியா களம் காண தயாராகி வருகிறது. முன்னதாக முதல் போட்டியில் அறிமுகமான ஆஸ்திரேலிய வீரர் நாதன் மெக்ஸ்வீனி சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்தார்.
அடிலெய்ட் சாதகம்:
இந்நிலையில் 2வது போட்டியில் தாம் சிறப்பாக விளையாடி இந்தியா உட்பட அனைவருக்கும் தனது திறமையை என்பதை காண்பிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அடிலெய்ட் தம்முடைய சொந்த ஊர் என்பதால் அங்குள்ள சூழ்நிலைகளை பயன்படுத்தி தம்மால் சிறப்பாக விளையாட முடியும் என்று மெக்ஸ்வீனி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“பெர்த்தில் எனக்கு 2 நல்ல வாய்ப்புகள் கிடைத்தன. அதில் அசத்தாதது பற்றி அதிகம் சிந்திக்க முயற்சிக்கவில்லை. அடுத்ததாக அடிலெய்டை எதிர்நோக்குகிறேன். நான் இங்கே சிறப்பாக விளையாடியுள்ளேன். இது என்னுடைய சொந்த ஊர் மைதானம். எனவே என்னுடைய சொந்த ஊரில் இருக்கும் ரசிகர்களுக்கு முன்பாக விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன்”
மெக்ஸ்வீனி நம்பிக்கை:
“குறிப்பாக இங்குள்ள பிட்ச் எப்படி இருக்கும் என்பது எனக்கு நன்றாக தெரியும். இங்கே நான் நிறைய விளையாடியுள்ளேன். அதே சமயம் இம்முறை இங்கு இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடுவது சவாலாக இருக்கும். ஆனால் நாங்கள் இங்கே சில வாரங்கள் ஒளிவிளக்குகளின் கீழ் பயிற்சிகளை எடுத்துள்ளோம். அந்த பயிற்சியில் நான் களத்தில் கொஞ்சம் அதிகமான நேரத்தை செலவிட்டு தயாராக உள்ளேன்”
இதையும் படிங்க: 10 வருசத்துல வெறும் 5 விக்கெட்ஸ் போதுமா? அஸ்வின், ஜடேஜாவை விட சுந்தர் தான் சரியானவர்.. தேவங் காந்தி
“அதிலிருந்து எனக்குத் தேவையான முழு நம்பிக்கையை எடுத்துக் கொள்வேன். இது போன்ற பெரிய தொடரில் நீங்கள் மற்றொரு வாய்ப்புக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை என்பதே ஒரு அழகான விஷயமாகும். எனவே பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் நான் தேவையான பாடங்களை எடுத்துக் கொள்வேன். அதை வைத்து இரண்டாவது போட்டியில் வெற்றிகரமாக செயல்பட விரும்புகிறேன். இது என்னால் என்ன செய்ய முடியும் என்பதை அனைவருக்கும் காண்பிக்க எனக்கு கிடைத்த மற்றும் ஒரு வாய்ப்பாகும்” என்று கூறினார்.



