
மெல்போர்ன் மைதானத்தில் நேற்று டிசம்பர் 26-ஆம் தேதி “பாக்ஸிங் டே” டெஸ்ட் கிரிக்கெட் போட்டியாக துவங்கிய இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்று முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 474 ரன்களை குவித்தது.
அந்த அணி சார்பாக அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 140 ரன்கள் குவித்து அசத்தினார். இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் ஜஸ்ப்ரீத் பும்ரா நான்கு விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியிருந்தனர்.
அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வருகிறது. கடந்த மூன்று போட்டிகளாக இந்திய அணியின் துவக்க வீரர்களாக விளையாடி வந்த ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோரது ஜோடி இந்த போட்டியில் பிரிக்கப்பட்டு மீண்டும் ரோஹித் சர்மா-ஜெயிஸ்வால் ஆகியோரது கூட்டணி துவக்க வீரர்களாக களமிறங்கியது.
அப்படி களமிறங்கிய ரோகித் சர்மா ஐந்து பந்துகளை சந்தித்து மூன்று ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்னர் கே.எல் ராகுல் பேட்டிங் செய்ய வரும்போது ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் அவரை ஸ்லெட்ஜிங் செய்தது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இந்த ஆஸ்திரேலியா தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இரண்டு அரைசதம் உட்பட 235 ரன்கள் குவித்து அசத்திய கே.எல் ராகுல் இன்றைய போட்டியில் மூன்றாவது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கியபோது : நாதன் லயன் அவரை நோக்கி “நீ என்ன தவறு செய்தாய்? உன்னை ஏன் மூன்றாவது நபராக பேட்டிங் செய்ய அனுப்பி இருக்கிறார்கள்?” என்று கிண்டல் செய்தார்.
இதையும் படிங்க : பட்லருக்கு அடுத்து பும்ராவை இப்படி செய்த இரண்டாவது பேட்ஸ்மேன் சாம் கோன்ஸ்டாஸ் மட்டும் தான் – விவரம் இதோ
அவரது இந்த ஸ்லெட்ஜிங் ஸ்டம்ப் மைக் பதிவின் மூலம் வெளியாகி இருந்தது. இப்படி நாதன் லயன் அவரை கிண்டல் செய்ததை தொடர்ந்து கே.எல் ராகுல் ஏன் மூன்றாவது இடத்தில் களமிறங்கினார் என்பது குறித்து ஒரு விவாதமே தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.