விராட் கோலி பொய் கூட சொல்லிருக்கலாம், மார்க் வாக்’கிற்கு நேதன் லயன் பதிலடி – நடந்தது என்ன

Mark Waugh Nathan Lyon
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்தியா முதல் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா பிரகாசப்படுத்தியது. அந்த நிலையில் பிப்ரவரி 17ஆம் தேதி துவங்கிய 2வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து 263 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 81 ரன்களும் பீட்டர் ஹேண்ட்ஸ்கோப் 72* ரன்களும் எடுத்தனர்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கடத்த போட்டியில் சுமாராக செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் முதன்மை ஸ்பின்னர் நேதன் லயன் இம்முறை ரோகித் சர்மா 32, கேஎல் ராகுல் 17, ஸ்ரேயாஸ் ஐயர் 4, கேஎஸ் பரத் 6 என 5 முக்கிய வீரர்களை சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் காலி செய்தார். அதனால் ஒரு கட்டத்தில் 66/4 என சரிந்த இந்தியாவை ரவீந்திர ஜடேஜா 26 ரன்களும் விராட் கோலி 44 ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றி அவுட்டானார்கள்.

- Advertisement -

ரசிகர்கள் ஆதங்கம்:
ஆனாலும் 139/7 என திண்டாடிய இந்தியாவை 8வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தூக்கி நிறுத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் 37 ரன்களும் அக்சர் பட்டேல் 74 ரன்கள் எடுத்து முழுமையாக காப்பாற்றினார்கள். அவர்களது பொறுப்பான ஆட்டத்தால் தப்பிய இந்தியா 262 ரன்கள் எடுத்து 1 ரன் மட்டுமே பின்தங்கியது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 2வது நாள் முடிவில் 61/1 என்ற நிலையுடன் விளையாடி வருகிறது. முன்னதாக இப்போட்டியில் மேத்தியூ குனேமான் வீசிய பந்தில் விராட் கோலி அவுட் கொடுக்கப்பட்ட விதம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதாவது பேட் மற்றும் கால் ஆகிய இரண்டின் மீதும் ஒரே நேரத்தில் பந்து உரசுவது போல் தெரிந்ததால் ரசிகர்கள் குழப்பமடைந்தது போலவே உறுதியான முடிவை எடுக்க முடியாமல் தடுமாறிய 3வது நடுவர் இறுதியில் கள நடுவர் நிதின் மேனன் கொடுத்த முடிவை பிரதிபலிக்கும் வகையில் மீண்டும் அவுட் என அறிவித்தார். ஆனால் 36.2.2 எம்சிசி விதிமுறைப்படி பேட் மற்றும் கால் ஆகிய இரண்டிலும் ஒரே நேரத்தில் பந்து படும் சூழல் ஏற்பட்டால் பந்து முதலில் பேட்டில் பட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதை சுட்டிக்காட்டிய ரசிகர்கள் விதிமுறை தெரியாமலேயே தவறான அவுட் கொடுத்த நடுவரை சரமாரியாக விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

மேலும் அந்த சமயத்தில் சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு கொடுத்திருக்க வேண்டும் என்று தெரிவித்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மார்க் வாக் விராட் கோலி துரதிஷ்டவசமாக அவுட் கொடுக்கப்பட்டதாக கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக செயல்படும் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த இடத்தில் விராட் கோலிக்கு அதிர்ஷ்டமில்லை. அது 50 – 50 முடிவாகும் இருக்கும். பெரும்பாலான நடுவர்கள் அதை அவுட் கொடுக்க மாட்டார்கள். பொதுவாக இது போன்ற 10 தருணங்களில் 9 முறை நிச்சயமாக அது அவுட் கிடையாது” என்று கூறினார்.

அதற்கேற்றார் போல் பெவிலியன் திரும்பியதும் பந்து முதலில் தனது பேட்டில் தான் பட்டது என்பது போன்ற ரியாக்சனை விராட் கோலி கொடுத்தார். இந்நிலையில் விராட் கோலி தனது பேட்டில் பட்டதாக பொய் கூட சொல்லியிருக்கலாம் ஆனால் அம்பயர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்ற வகையில் நேதன் லயன் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை சரியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். இருப்பினும் விராட் கோலி தனது பேட்டில் பட்டதாக கூறுகிறார் என்பதில் சந்தேகமில்லை. அது அவருடைய வழியில் சென்றிருக்க வேண்டும்”

இதையும் படிங்க:IND vs AUS : விராட் கோலி விக்கெட்ல பிரச்சனையே அதுதான். சர்ச்சை விக்கெட்டிற்கு விளக்கம் கொடுத்த – சுனில் கவாஸ்கர்

“ஆனால் அந்த சமயத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்ட நடுவர்களுக்கு தலைவணங்குகிறேன். இது போன்ற தருணங்களை சமாளிப்பது மிகவும் கடினமாகும். மேலும் முடிவு எங்களுக்கு சாதகமாக வர வேண்டும் என்பதற்காக நடுவர்கள் மீது நாங்கள் எப்போதும் அழுத்தத்தை போடுவோம். எது எப்படியிருந்தாலும் இறுதியில் நடுவர் எடுத்த முடிவு சரியானதாகும்” என்று கூறினார்.

Advertisement