இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட பார்டர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது மெல்போர்ன் நகரில் நேற்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி சார்பாக விளையாடிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வினின் சாதனையை முந்தி மிகச்சிறப்பான சாதனை ஒன்றினை படைத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வினை முந்திய நாதன் லயன் :
அந்த வகையில் நடைபெற்று முடிந்த இந்த நான்காவது போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 474 ரன்களை குவித்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது 369 ரன்களை குவித்ததால் 105 ரன்கள் முன்னிலையுடன் தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி ஆஸ்திரேலிய அணி 234 ரன்கள் குவித்தது.
இதன் காரணமாக 339 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணி 155 ரன்கள் மட்டுமே குவித்ததால் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் தற்போது முன்னிலை பெற்றுள்ளது.
அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் டிரா செய்தாலே தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் இரண்டு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக அவர் 538 விக்கெட்டுகளை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஸ்வின் சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணியை சேர்ந்த முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இதையும் படிங்க : இனியும் பைனலுக்கு போக இந்திய அணிக்கு வாய்ப்பு இல்ல.. எனவே இந்த மாற்றத்தை செய்யுங்க – கவாஸ்கர் அட்வைஸ்
அந்த சாதனையை தற்போது தகர்த்துள்ள நாதன் லயன் 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 538 விக்கெட்டுகள் வீழ்த்தி ஒட்டுமொத்தமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பட்டியலில் ஏழாவது இடத்திலிருந்த அஸ்வினை எட்டாவது இடத்திற்கு தள்ளி தற்போது அவர் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் ஒட்டுமொத்தமாக முரளிதரன் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



