2016ஆம் ஆண்டு டிஎன்பிஎல் தொடரின் மூலம் வெளி உலகத்திற்கு தெரிந்தவர் சேலத்தைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன். அந்த டிஎன்பிஎல் தொடரில் சூப்பர் ஓவரில் 6 பந்துகளில் 6 ஏக்கர் வீசி தனது அணியை வெற்றிபெற வைத்திருந்தார். இதனை பார்த்த ஐபிஎல் அணி உரிமையாளர்கள் 2017 ஆம் ஆண்டு நடராஜனை எப்படியாவது தங்களது அணியில் எடுக்க வேண்டும் என்று போட்டி போட்டுக்கொண்டு எடுத்தனர். இறுதியாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகராக இருந்த விரேந்தர் சேவாக் 3 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தார்.
ஆனால் அந்த வருடம் அவருக்கு ஒரு சில போட்டிகளில் தான் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் விளையாடிய போட்டிகளில் அனைத்துமே பஞ்சாப் அணி வெற்றி பெற்றிருந்தது. இருந்தாலும் காயம் காரணமாக அவரால் பெரிதாக விளையாட முடியவில்லை. அதனை தொடர்ந்து 2 ஆண்டுகள் கழித்து இந்த வருடம் நடராஜன் தனது முழு திறமையை வெளிப்படுத்தினார் என்று கூற வேண்டும். இந்த வருட ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி விளையாடிய 16 போட்டிகளில் பங்குபெற்று விளையாடினார் நடராஜன்.
அத்தனை போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. 16 விக்கெட் வீழ்த்தி இருந்தார். தன் மீது வைத்த நம்பிக்கையை சிறிதும் வீணாகாமல் காப்பாற்றினார். தோனி, விராட் கோலி போன்ற சர்வதேச ஜாம்பவான் வீரர்களின் விக்கெட்டுகளை தனியாளாக தட்டினார். இவரது திறமையை கண்ட இந்திய அணி உடனடியாக அவருக்கு டி20 போட்டியிலும் ஒருநாள் போட்டிகளிலும் வாய்ப்பு கொடுத்தது.
அவர் விளையாடிய முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுகளும் முதல் டி20 போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்நிலையில் இந்திய அணிக்காக முதன்முதலில் சர்வதேச அளவில் விளையாடிய அனுபவம் குறித்து பேசியிருக்கிறார் நடராஜன். அவர் கூறுகையில் :
“இந்திய அணிக்காக நான் களமிறங்கியது எனது கனவு நிறைவேறியது” போன்று இருக்கிறது. எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். அடுத்தடுத்த போட்டிகளில் நான் அணிக்காக விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் அதிகமான சவால்களை எதிர்நோக்கி என்னை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார் நடராஜன்.