அண்மையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக பங்கேற்று விளையாடி அசத்திய தமிழக இடதுகை வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் தனது யார்க்கர் பந்துவீச்சின் மூலம் உலகின் பல்வேறு முன்னணி வீரர்களை அச்சுறுத்தினார். அவரது இந்த சிறப்பான பந்து வீச்சு காரணமாக ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக முதலில் அணிக்குள் இணைந்தார்.
அதன்பிறகு டி20, ஒருநாள் என வீரர்களின் காயம் காரணமாக அணியில் இணைந்த நடராஜன் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த டெஸ்ட் தொடருக்கான அணியிலும் அவரை வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக இடம்பெற வைத்து பிசிசிஐ ஆஸ்திரேலியாவிலேயே தங்க வைத்தது. இந்நிலையில் தற்போது இரண்டாவது போட்டியில் உமேஷ் யாதவ் இருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் டெஸ்ட் அணியிலும் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
மேலும் வருகிற 7ஆம் தேதி துவங்க இருக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுக வீரராக டெஸ்ட் போட்டியிலும் நடராஜன் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி கேப்டன் ரகானே அவரை விளையாட வைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் தெரிகிறது. அதனால் நிச்சயம் அவருக்கு இடம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்திய வீரர்களுடன் தற்போது இணைந்து பயிற்சியை மேற்கொண்டு வரும் நடராஜன் பீல்டிங் பயிற்சியிலும் அசத்தி வருகிறார். இன்றைய பயிற்சியில் பீல்டிங்கின் போது வேகமாக ஓடி அதிஉயர கேட்ச் ஒன்றை பிடித்து அசத்தியுள்ளார். அந்த வீடியோவை பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. அதனை கண்ட ரசிகர்கள் உடனடியாக லைக்ஸ்களையும், வியூவ்ஸ்களையும் வாரி இறைத்து வருகின்றனர்.
@Natarajan_91 has been grabbing his chances very well on this tour. 😁🙌 #TeamIndia #AUSvIND pic.twitter.com/sThqgZZq1k
— BCCI (@BCCI) January 3, 2021
இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில் தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் முக்கியமான மூன்றாவது போட்டியில் ஆடும் லெவனில் நடராஜனை சேர்க்க வேண்டும் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கிடைக்காதா ? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.