கடந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய தங்கராசு நடராஜன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்ததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய சுற்றுப்பயணத்தில் இடம்பிடித்தார். தங்கராசு நாகராஜன் டேவிட் வார்னர் தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். அப்போது 16 போட்டிகளில் பங்கு பெற்ற நடராஜன் 16 வெற்றிகளை பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதிலும் குறிப்பாக தங்கராஜனின் யாக்கர் பந்துவீச்சு பெரும் அளவில் பேசப்பட்டது.
கடந்த ஐபிஎல் தொடரில் தோனி, விராட் கோலி, ஏபி டிவில்லியர்ஸ் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களின் விக்கெட்களையும் விழித்திருந்தார் நடராஜன். இதன்பிறகு வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக இந்திய அணியில் நடராஜன் இடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தங்கராசு நடராஜனுக்கு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் போட்டியிலேயே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார் நடராஜன்.
பிறகு டி20 போட்டியில் விளையாடும் வாய்ப்பும் கிடைத்தது. இதிலும் சிறப்பாக செயல்பட்ட நடராஜன் பல்வேறு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 4 போட்டியில் விளையாடிய நடராஜன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் நடராஜன் டெஸ்ட் போட்டிக்காக வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக தேர்வு செய்யப்பட்டார். இப்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் நடராஜன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு பதிலாக களமிறங்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட நடராஜன் டெஸ்ட் போட்டியிலும் சிறப்பாக செயல்படுவார் என்று பல்வேறு கோணங்களில் முன்னாள் வீரர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் நடராஜன் டெஸ்ட் போட்டிகளில் கலந்துகொள்வது குறித்து நடராஜனின் பயிற்சியாளர் திவாகர் வாசு கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய திவாகர் வாசு “ நடராஜனின் முன்னேற்றம் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான ஆலோசனையும் கூற இருக்கிறேன். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் போல் டெஸ்ட் போட்டியிலும் வெறும் யார்க்கர் பந்துகளை மட்டும் வீசிக் கொண்டிருக்க முடியாது.
நடராஜன் பந்தை ஸ்விங் செய்ய வேண்டும். மேலும் அவர் சீரான கோட்டில் பந்தை வீச வேண்டும். அதுமட்டுமின்றி டெஸ்ட் போட்டியில் விளையாடுவது அவ்வளவு எளிதல்ல. டெஸ்ட் போட்டியில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டும். அதே சமயத்தில் பந்துவீச்சில் பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து கற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு கற்றுக் கொண்டால் மட்டுமே டெஸ்ட் போட்டியில் நடராஜன் நீடித்திருக்க முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.