
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் 4வது போட்டி மான்செஸ்டர் நகரில் ஜூலை 23ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. அதில் முதலில் விளையாடிய இந்தியா போராடி 358 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 54, சாய் சுதர்சன் 61 ரன்கள் எடுத்தார்கள்.
இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடும் இங்கிலாந்து 2வது நாள் முடிவில் 225/2 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடுகிறது. ஜாக் கிராவ்லி 84, பென் டக்கெட் 94 ரன்கள் எடுத்த அந்த அணிக்கு களத்தில் ஜோ ரூட் 11*, ஓலி போப் 20* ரன்களுடன் உள்ளனர். முன்னதாக பஸ்பால் என்ற பெயரில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்தை கடந்த 2 போட்டிகளில் இந்தியா சிறப்பாக பவுலிங் செய்து கட்டி போட்டது.
ஆனால் இந்தப் போட்டியில் இரண்டாவது நாளில் பும்ரா உள்ளிட்ட அனைத்து இந்திய பவுலர்களும் தடுமாற்றமாகவே பவுலிங் செய்தனர். அதைப் பயன்படுத்திய இங்கிலாந்து 4.89 என்ற ரன்ரேட்டில் பேட்டிங் செய்து இந்தியாவை வெளுக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில் 2வது நாளில் கேப்டன் சுப்மன் கில் தம்முடைய பவுலர்களை சிறப்பாக பயன்படுத்தாமல் மோசமாக கேப்டன்சிப் செய்ததாக நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
அதனால் ரிஷப் பண்ட் காயத்துடன் போராடி எடுத்த ரன்களை அவர் வீணடித்துள்ளதாகவும் ஹுசைன் விமர்சித்துள்ளார். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “மான்செஸ்டரில் கொஞ்சம் மாறுபட்ட சூழ்நிலைகள் இருக்கிறது. ஆனால் அங்கே இந்தியா மிகவும் மோசமாக பவுலிங் செய்தார்கள். வானிலை மாறியதால் உங்களால் பிட்ச்சின் இருபுறமும் பவுலிங் செய்ய முடியவில்லை”
“ஆனால் நிறைய பந்துகள் காலில் போடப்பட்டன. அதே போல கேப்டன் எடுத்த முடிவுகளும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. நீங்கள் சிராஜ்க்கு பதிலாக ஒரு வாரம் முன்பு வரை அணியிலேயே இல்லாத கம்போஜிடம் புதிய பந்தை கொடுத்தீர்கள். அந்த சூழ்நிலையில் நான் சிராஜை பவுலிங் செய்ய வைத்திருப்பேன். மற்றொரு பகுதியில் பும்ராவை பயன்படுத்தியிருப்பேன்”
இதையும் படிங்க: பஸ்பால் இங்கிலாந்து இஸ் பேக்.. பும்ரா இருந்தும்.. 1990க்குப்பின் மோசமான சாதனை படைத்த இந்தியா தப்புமா?
“பிட்ச்சில் சில பகுதிகளில் பச்சை புற்கள் இருப்பது பற்றி நாம் பேசினோம். அங்கே பந்து வீசி சமமற்ற பவுன்ஸ், மூமெண்ட்டைப் பயன்படுத்திய ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை எடுத்தார். ரிஷப் பண்ட் ஒற்றைக்காலில் களத்திற்கு சென்று மதிப்புள்ள ரன்களை எடுத்தார். ஆனால் இந்தியா அந்த ரன்களை இங்கிலாந்துக்கு திருப்பி கொடுத்து விட்டார்கள்” என்று கூறினார்.