ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் தங்களது போட்டிகளை துபாயில் விளையாடும் இந்தியா இதுவரை வங்கதேசம் மற்றும் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது. அதனால் செமி ஃபைனல் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்று அசத்தியுள்ளது. முன்னதாக இந்தத் தொடரில் பாதுகாப்பு பிரச்சினைக் காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று விளையாட முடியாது என்று இந்தியா அறிவித்து விட்டது.
அதனால் இந்தியா தங்களுடைய அனைத்துப் போட்டிகளையும் துபாயில் விளையாடும் என்று ஐசிசி அறிவித்தது. இந்நிலையில் அப்படி ஒரே மைதானத்தில் விளையாடிவதால் பிட்ச், சூழ்நிலைகள், பிளேயிங் லெவனை தேர்ந்தெடுப்பது போன்ற விஷயங்களில் இந்தியாவுக்கு ஐசிசி சாதகம் செய்துள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் நாசர் ஹுசைன் மற்றும் மைக்கேல் ஆதர்டன் விமர்சித்துள்ளார்கள்.
பாகிஸ்தானை வைத்து:
அந்த வகையில் பாகிஸ்தானை வைத்து இந்தியா எளிதாக கோப்பையை வெல்ல ஐசிசி வழி வகுத்துள்ளதாகவும் அவர்கள் விமர்சித்துள்ளார்கள். இது பற்றி ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஆதர்டன் பேசியது பின்வருமாறு. “இந்தியா துபாயில் விளையாடுவதில் மட்டும் என்ன சாதகம் இருக்கிறது? அது ஏற்றுக்கொள்ள முடியாத சாதகமாக இருப்பது போல் தெரிகிறது”
“ஏனெனில் வெறும் ஒரு மைதானத்தில் மட்டும் விளையாடும் அவர்கள் மற்ற அணிகளைப் போல் எங்கேயும் பயணம் செய்ய வேண்டியதில்லை. அதே போல அவர்கள் துபாய் சூழ்நிலைகளில் மட்டும் கவனம் செலுத்தி வீரர்கள் தேர்வுகளை செய்யலாம். அதே போல செமி ஃபைனலுக்கு அவர்கள் தகுதி பெற்றால் துபாயில் விளையாடுவார்கள். இது ஏற்றுக் கொள்ள முடியாத மிகப்பெரிய சாதகம் போல தெரிகிறது” எனக் கூறினார்.
இந்தியாவுக்கு சாதகம்:
அதே நிகழ்ச்சியில் நாசர் ஹுசைன் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரில் விளையாடும் சிறந்த அணியான இந்தியாவுக்கு கண்டிப்பாக இது பெரிய சாதகம். அவர்கள் ஒரே ஹோட்டலில் தங்கலாம். பிட்ச் பற்றியும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். துபாய் எப்படி இருக்கும் என்பது தெரிந்து அவர்கள் தங்களுடைய அணியில் நிறைய ஸ்பின்னர்களையும் தேர்வு செய்துள்ளார்கள்”
இதையும் படிங்க: சம்பளம் கொடுக்கலயா? இந்தியாவை டாமினேட் பண்ண இது கூடவா இல்ல.. பாகிஸ்தானை சாடிய மியான்தத்
“மற்ற அணிகள் கராச்சி, லாகூர் போன்ற வெவ்வேறு மைதானங்களுக்குத் தகுந்தார் போல் தங்களுடைய அணிகளை மாற்றி மாற்றி எடுக்க வேண்டும். பயணிக்க வேண்டும். எனவே அது இந்தியாவுக்கு சாதகமான விஷயமாகும். பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என்று இந்தியா சொன்னால் அவர்களை இல்லாமல் உங்களால் விளையாட முடியாது. அதனால் அவர்கள் துபாயில் விளையாடுகிறார்கள்” என்று கூறினார்.



