
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலகக் கோப்பையில் தங்களுடைய 2வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது. உலக அளவில் நிலவிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் அக்டோபர் 23ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 159/8 ரன்கள் சேர்த்தது. முஹம்மது ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஷான் மசூட் 52* ரன்களும், இப்திகார் அகமது 51 ரன்களும் எடுத்தனர்.
அதை தொடர்ந்து 160 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா, ராகுல், சூரியகுமார் என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர். அதனால் 31/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று தோல்வியின் பிடியில் சிக்கிய இந்தியாவை 5வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் கை கோர்த்த ஹர்திக் பாண்டியா 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்து கடைசி ஓவரில் 40 (37) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் பொறுப்பின்றி ஸ்டம்பிங் ஆகி சென்றதால் போட்டியில் மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இதெல்லாம் ஒரு பிழைப்பு:
இருப்பினும் அடுத்து களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் முகமது நவாஸ் போட்ட அதே ஒய்ட் வலையில் சிக்காமல் கடைசி பந்தை தூக்கி அடித்து 20 ஓவர்களில் இந்தியாவை 160/6 ரன்கள் எடுக்க வைத்து வெற்றி பெற வைத்தார். அதனால் அற்புதமான வெற்றி பெற்ற இந்தியா கடந்த வருடம் துபாயில் சந்தித்த வரலாற்று தோல்விக்கு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. இந்த வெற்றிக்கு சூப்பர்மேனை போல் 6 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 82* (53) ரன்களைக் குவித்து காப்பாற்றிய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இருப்பினும் அனல் பறந்த இப்போட்டியில் கடைசி ஓவரில் இடுப்பளவு வந்த பந்தை சிக்ஸர் அடித்து விட்டு விராட் கோலி நோ-பால் கேட்ட பின் அம்பயர் நோ-பால் வழங்கியது பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. ஏனெனில் அந்த பந்து இடுப்பு மட்டத்திற்கு வந்ததாக தெரிவிக்கும் பாகிஸ்தானியர்கள் விராட் கோலி கிரீஸ் விட்டு வெளியே வந்ததால் நோ-பால் கிடையாது என்றும் இதற்காக அம்ப்யர்களுக்கு எவ்வளவு பணத்தை கொடுத்தீர்கள் என்றும் மனசாட்சியின்றி பேசுகிறார்கள்.
ஆனால் ஒரு சுழல் பந்து வீச்சாளரான முகமது நவாஸ் வீசிய அந்த ஃபுல் டாஸ் பந்து விராட் கோலியின் இடுப்புக்கு மேலே வந்ததுடன் அதை அவர் சந்திக்கும் போது அவருடைய பின்னங்கால் வெள்ளை கோட்டின் மேல் இருந்தது. அதனால் விதிமுறைப்படி அது நோ-பால் தான் என்று ஆதாரத்துடன் இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர்.
ஆனாலும் அதை ஏற்றுக்கொள்ளாத பாகிஸ்தான் ரசிகர்கள் “அம்பயர்கள் இந்தியாவுக்கு சாதகமாக சில வேடிக்கையான முடிவுகளை எடுத்தார்கள். ஆனாலும் ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆகியோருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்பதால் நாம் அமைதியாக இருக்க வேண்டும்” என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹூசைன் அந்த முடிவுக்கு தொலைக்காட்சியில் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் ஆதாரமின்றி தாங்களாகவே ஒரு பிரச்சாரத்தை சமூக வலைதளங்களில் உருவாக்கி டிரன்ட் செய்தனர்.
அதை பார்த்து அதிர்ச்சியடைந்த நாசர் ஹூசைன் இது போன்ற வதந்திகளை பரப்பாமல் தயவு செய்து டெலிட் செய்யுமாறு ஒரு பாகிஸ்தான் ரசிகர் பதிவிட்ட போலி பதிவிற்கு கீழே பதிலளித்துள்ளார். இது பற்றி டுவிட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு.
“இதை டெலிட் செய்வதே இதற்கு நீங்கள் எடுக்கும் சரியான முடிவாக இருக்கும். இது போன்ற போலியான செய்திகள் இன்றைய நாளின் மிகச்சிறந்த கிரிக்கெட்டுக்கு தகுதியானது கிடையாது, நன்றி” என்று கூறினார். அதனால் உண்மை அம்பலமான நிலையில் அந்த பாகிஸ்தான் ரசிகர் அந்த பதிவை நீக்கி விட்டார். இதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் இப்படி போலியாக ஒரு பிரச்சாரத்தை உருவாக்கி இந்தியாவை கொச்சைப்படுத்தும் இந்தப் பிழைப்பு தேவை தானா என்ற வகையில் சமூக வலைதளங்களில் கலாய்க்கிறார்கள்.