
இந்திய அணியின் அனுபவ வீரரான சத்தீஸ்வர் புஜாரா கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 103 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுதவிர்த்து ஐபிஎல் போட்டிகளில் 30 ஆட்டங்களிலும் அவர் பங்கேற்று விளையாடி உள்ளார். 37 வயதான சத்தீஸ்வர் புஜாரா இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியிருந்த வேளையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
இந்திய அணிக்காக 2010-ஆம் ஆண்டு முதல் 2023-ஆம் ஆண்டு வரை 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 19 சதங்கள் மற்றும் 35 அரைசதங்கள் என 43 ரன்கள் சராசரியுடன் 7195 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணியில் ராகுல் டிராவிட் ஓய்வுபெற்ற பிறகு மூன்றாவது இடத்தில் களமிறங்கிய புஜாரா பல்வேறு சரித்திர வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார்.
தற்போது வயது மூப்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நிராகரிக்கப்பட்டு வந்த அவர் இனியும் தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதனாலே இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற புஜாராவிற்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
இந்நிலையில் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் இருந்து வந்த ஒரு வாழ்த்துக் கடிதத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் புஜாரா பகிர்ந்துள்ளார். அதில் புஜாரா குறிப்பிடப்பட்டதாவது : நரேந்திர மோடி என்னுடைய ஓய்வுக்கு பிறகு அனுப்பிய இந்த கடிதத்தை படித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நாட்டிற்காக விளையாடிய ஒவ்வொரு தருணத்தையும் நான் நினைத்து ரசித்துள்ளேன். இந்த கடிதத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறேன் என நரேந்திர மோடியின் அந்த கடிதத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் மோடி குறிப்பிட்டதாவது : சத்தீஸ்வர் புஜாரா இந்திய அணிக்காக உங்களுடைய பங்களிப்பு என்பது மிகப்பெரிய ஒன்று. இத்தனை ஆண்டுகால கரியரில் இந்திய அணிக்காக பல போட்டிகளை நீங்கள் வென்று கொடுத்திருக்கிறீர்கள். அதற்காக உங்களை பாராட்டுகிறேன். இனிவரும் எதிர்காலமும் உங்களுக்கு சிறப்பாக அமைய என்னுடைய வாழ்த்துக்கள்.
இதையும் படிங்க : ஆன்லைன் கேம்ஸ் தடையால் இந்திய அணியின் ஜெர்சியில் ஏற்படவுள்ள மாற்றம் – விவரம் இதோ
நீங்கள் இந்திய அணியை விட்டு சரியான நேரத்தில் வெளியேறியிருக்கும் வேளையில் இந்திய அணி தற்போது பாதுகாப்பான கைகளில் உள்ளதாக உணர்கிறேன். உங்களுடைய பங்களிப்பிற்கு பாராட்டுக்கள் என புஜாராவை நரேந்திர மோடி வாழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.