நீங்கள் நேசித்தது இதைத்தான். வாழ்ந்ததும் அதற்காகத்தான் – சுரேஷ் ரெய்னாவை வாழ்த்திய மோடி

Raina-1

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் ஓய்வை அறிவித்த அடுத்த சில நிமிடங்களிலேயே அடுத்த அதிர்ச்சியாக சுரேஷ் ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இதனால் ரசிகர்கள் பெரும் வேதனை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் உலகெங்கிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வந்தன. மேலும் தோனியை பாராட்டி பிரதமர் மோடி ஏற்கனவே கடிதம் எழுதியிருந்தார்.

Raina-2

அதனை தோனி தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் தற்போது சுரேஷ் ரெய்னாவை பாராட்டியும் அவருக்கு மோடி வாழ்த்துக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தை தற்போது சுரேஷ் ரெய்னா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மோடி குறிப்பிட்டுள்ளதாவது : கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி நீங்கள் எடுத்த முடிவு கடினமான முடிவுகளில் ஒன்று. நீங்கள் ஓய்வு பெற்று விட்டீர்கள் என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன் ஏனென்றால் இன்னும் நீங்கள் இளமையாகவும், உற்சாகமாகவும் இருக்கிறீர்கள்.

இந்த முடிவுக்குப் பிறகு நீங்கள் அடுத்த இன்னிங்ஸ்க்காக தயாராக வேண்டும். நீங்கள் கிரிக்கெட்டுக்காகவே வாழ்ந்தீர்கள், அதையே உயிர் மூச்சாக கொண்டீர்கள், லக்னோ வின் மைதானங்களிலும், அங்குள்ள பகுதிகளிலும் இருந்து உங்களின் கிரிக்கெட் பயணம் தொடங்கியது. மிகச் சிறப்பாக அமைந்த உங்களது கிரிக்கெட் வாழ்க்கை இந்திய அணிக்கு கௌரவம் சேர்க்கும் வகையில் இருந்தது.

மேலும் இந்திய அணிக்கு தேவைப்படும் போது ஒரு சில நேரங்களில் நீங்கள் கேப்டனாக செயல்பட்டு உள்ளீர்கள். மைதானத்தில் உங்களது பீல்டிங்கால் அனைவரையும் கவர்ந்து ஊக்கமளித்து வந்தீர்கள். பல்வேறு சிறந்த காட்சிகளை பிடித்தவர்களின் பட்டியலில் நீங்களும் இடம்பெற்று உள்ளீர்கள். ஒரு பேட்ஸ்மேனாக, ஒரு பீல்டராக என அனைத்திலும் உங்களது திறமை சிறப்புக்குரியது. 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலும் உங்கள் பங்களிப்பை யாராலும் மறக்க முடியாது.

- Advertisement -

அதிலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அந்த போட்டியை யாரும் மறக்க மாட்டார்கள் என்று நான் உறுதியாக சொல்வேன். இனி நீங்கள் அடிக்கும் கவர் டிரைவ் ஷாட்டை ரசிகர்கள் தவற விடுவார்கள். உங்களின் போராட்ட குணம் பல இளைஞர்களுக்கு உந்து சக்தியாகத் திகழ்கிறது. மேலும் அணியின் ஒட்டுமொத்த வெற்றிக்கும் உங்களது உற்சாகம், உத்வேகம் ஆகியவற்றை சுயநலமின்றி காட்டும் ஒரு நபராக நீங்கள் தெரிந்துள்ளீர்கள்.

Raina

இந்திய அணிக்கும் தேசத்திற்காக மட்டும் விளையாடிய உங்களது பங்களிப்பு அளப்பரியது. எந்த ஒரு விக்கெட் விழுந்தாலும், யார் சதம் அடித்தாலும் உங்களது ஆர்ப்பரிப்பு முதலில் இருக்கும். அந்த அளவிற்கு அணியுடன் ஈடுபாடு கொண்டவராக இருந்துள்ளீர்கள். இளைஞர்களுக்கு உற்சாகமூட்டி அணியையும் மற்றும் இந்திய கிரிக்கெட்டை மேம்படுத்த உதவியதற்கும் உங்களுக்கு நன்றி என்று பிரதமர் அதில் குறிப்பிட்டுள்ளார்.