வங்கதேசத்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அத்தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. அந்தத் தொடரில் வங்கதேசத்தை தோற்கடித்து இந்தியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இந்தியா கடந்த 12 வருடங்களாக சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வருகிறது. மேலும் ஐசிசி தரவரிசையில் இந்தியா உலகின் நம்பர் 2 அணியாக ஜொலித்து வருகிறது. மறுபுறம் 9வது இடத்தில் இருக்கும் வங்கதேசம் சமீபத்தில் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக தோற்கடித்து வரலாறு படைத்தது.
எக்ஸ்ட்ரா நம்பிக்கை:
அதே போல இந்தியாவையும் தோற்கடிப்போம் என்று பாகிஸ்தானை வீழ்த்திய கையோடு வங்கதேச கேப்டன் நஜ்முல் சாண்டோ சவால் விடுத்திருந்தார். இந்நிலையில் பாகிஸ்தானை தோற்கடித்ததால் தங்களுக்கு இந்தியாவையும் வீழ்த்த முடியும் என்ற எக்ஸ்ட்ரா நம்பிக்கை கிடைத்துள்ளதாக நஜ்முல் சாண்டோ கூறியுள்ளார். மேலும் ட்ரா, தோல்விக்கு இடமின்றி 2 போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தியாவுக்கு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் இந்தியாவை வீழ்த்தும் திட்டம் பற்றி வங்கதேசத்திலிருந்து புறப்படும் முன் அவர் பேசியது பின்வருமாறு. “அது எங்களுக்கு சவாலான தொடராகும். ஆனால் பாகிஸ்தான் வெற்றியால் எக்ஸ்ட்ரா தன்னம்பிக்கை கிடைத்துள்ளது. அது எங்களுடைய மொத்த நாட்டுக்கும் உள்ளது என்று கணிக்கிறேன். ஒவ்வொரு தொடரும் வாய்ப்பாகும்”
இந்தியாவை வெல்வோம்:
“நாங்கள் 2 டெஸ்ட் போட்டிகளையும் வெல்ல விரும்புகிறோம். அதற்கு எங்களுடைய செயல்முறைகளை பின்பற்றுவது அவசியம். எங்கள் வேலையை செய்தால் எங்களால் நல்ல முடிவை பெற முடியும். ஐசிசி தரவரிசையில் இந்தியா எங்களை விட முன்னிலையில் இருக்கிறது. ஆனால் சமீபத்தில் நன்றாக விளையாடிய நாங்கள் அதே போல 5 நாட்களும் விளையாட விரும்புகிறோம் என்பதே எங்களுடைய லட்சியமாகும். நாங்கள் டெஸ்ட் போட்டியின் முடிவை கடைசி செஷனில் பெற விரும்புகிறோம். அந்த சமயத்தில் வெற்றி எந்த பக்கம் வேண்டுமானாலும் செல்லலாம். எனவே இது இந்தியாவில் எங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்வதற்கான வாய்ப்பாகும்”
இதையும் படிங்க: கெளதம் கம்பீரே நினைச்சாலும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு அந்த சான்ஸ் கிடைக்க வாய்ப்பில்லை.. ஆகாஷ் சோப்ரா
“நாங்கள் அந்த 2 போட்டிகளையும் வெல்லும் எண்ணத்துடன் களமிறங்க உள்ளோம். எங்களின் வேகம் மற்றும் ஸ்பின் பவுலிங் அட்டாக் நன்றாக இருக்கிறது. இந்தியாவை விட எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் அனுபவத்தில் குறைந்திருக்கலாம். ஆனால் எங்களது ஸ்பின்னர்கள் அவர்களுக்கு நிகரான அனுபவத்துடன் எந்த சூழ்நிலையிலும் அசத்துவார்கள். எனவே நாங்கள் அனைவரும் சேர்ந்து 100% செயல்பாடுகளை கொடுத்தால் வித்தியாசத்தை ஏற்படுத்த முடியும்” என்று கூறினார்.



