ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரில் அக்டோபர் ஐந்தாம் தேதி இலங்கையில் உள்ள கொழும்புவில் 6வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பரம எதிரி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஹர்லின் தியோல் 46, ரிச்சா கோஸ் 35*, ஜெமிமா ரோட்ரிகஸ் 32, பிரதிகா ராவல் 31 ரன்கள் எடுத்தனர். பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக டயானா பைக் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
இந்தியாவுக்கு சப்போர்ட் பண்றிங்களா:
அடுத்ததாக விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு கிராந்தி கௌட் வீசிய 4வது ஓவரின் கடைசி பந்தை முனிபா அலி அடிக்காமல் காலில் வாங்கினார். அப்போது இந்திய அணியினர் எல்பிடபுள்யூ கேட்டதற்கு அம்பயர் விக்கெட் வழங்கவில்லை. அப்போது விக்கெட் கீப்பர் ரிச்சா கோஸ் வேண்டாம் என்று சொன்னதால் இந்திய அணி ரிவியூ எடுக்கவில்லை. அதற்கிடையே வெள்ளைக்கோட்டை விட்டு வெளியே வந்த முனிபா அலி மீண்டும் உள்ளே சென்று பேட்டை தரையில் தொட்டார்.
இதற்கிடையே பந்தை எடுத்த தீப்தி சர்மா ஸ்டம்ப் மேலே அடித்து ரன் அவுட் கேட்டார். அதை ஏற்றுக்கொண்ட நடுவர் 3வது நடுவரை அணுகினார். அதை சோதித்த போது பந்து ஸ்டம்பின் மேலே அடிக்கையில் முனிபா அலி பேட் தரையில் படாமல் காற்றில் இருந்தது தெரிந்தது. அதனால் மூன்றாவது நடுவர் அவுட் என்று வழங்கியதால் முனிபா அலி ஏமாற்றத்துடன் சென்றார்.
பாகிஸ்தான் கேப்டன் வாக்குவாதம்:
இதைப் பார்த்த பாகிஸ்தான் கேப்டன் பாத்திமா சானா கோபத்துடன் பௌண்டரி எல்லைக்கு வந்து 4வது அம்பயரிடம் வாக்குவாதம் செய்தார். குறிப்பாக முனிபா அலி ஏற்கனவே தரையில் பேட்டை வைத்து விட்டதால் அது எப்படி ரன் அவுட்டாகும்? இந்தியாவுக்கு சப்போர்ட் பண்றீங்களா? என்ற வகையில் அவர் 4வது அம்பயரிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால் விதிமுறைப்படி முனிபா அலி பேட்டால் தரையில் தொட்டதும் பந்து காலாவதியாகி விட்டது என்று அம்பயர் அறிவிக்கவில்லை.
இதையும் படிங்க: நடுவரின் தவறால் தவறிய இந்தியாவின் டாஸ் அதிர்ஷ்டம்.. அமைதியுடன் வாங்கிய பாகிஸ்தான் கேப்டன்.. நடந்தது என்ன?
மாறாக இந்திய அணி ரிவ்யூ எடுக்கிறார்களா என்று 15 நொடிகள் வரை அம்பயர் காத்திருந்தார். அதுவரை அப்பந்து காலாவதியாகவில்லை. அதை எடுத்து தீப்தி சர்மா ஸ்டம்ப் மேலே அடித்த போது பேட் தரைக்கு மேலே இருந்தது. எனவே விதிமுறைப்படி முனிபா அலி அவுட் என்று 3வது அம்பயர் அறிவித்து விட்டார். இருப்பினும் அந்தத் தீர்ப்பு இந்தியாவுக்கு சாதகமாக வழங்கப்பட்டதாக பாத்திமாவை போலவே சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் ரசிகர்கள் விதிமுறை தெரியாமல் விமர்சிக்கின்றனர்.



