169 ரன்ஸ்.. ஏணி வெச்சாலும் எட்டாத சாதனை.. கலங்கிய குல்கர்னி.. விதர்பாவை விளாசி சாதித்த மும்பை

Ranji Trophy Mumbai
- Advertisement -

இந்தியாவின் பழமை வாய்ந்த உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பையின் 2024 சீசன் இறுதிப்போட்டி மார்ச் 10ஆம் தேதி மும்பையில் துவங்கியது. அதில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் வெற்றி கண்ட மும்பை மற்றும் விதர்பா அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற விதர்பா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய மும்பை 224 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சொல்லப்போனால் பிரிதிவி ஷா 46, லால்வானி 37 ரன்கள் எடுத்தும் முசீர் கான் 7, கேப்டன் ரகானே 7, ஸ்ரேயாஸ் ஐயர் 7, ஹர்திக் தாமோர் 5 ரன்களில் அவுட்டானதால் 111/5 என மும்பை சரிந்தது. அப்போது 200 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணியை முக்கிய நேரத்தில் வந்து அதிரடியாக விளையாடிய சர்துள் தாக்கூர் 75 (69) ரன்கள் விளாசி போட்டியில் திருப்பு முனையை உண்டாக்கினார்.

- Advertisement -

சாதித்த மும்பை:
விதர்பா சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷ் துபே 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து விளையாடிய விதர்பா மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி மும்பையின் தரமான பந்து வீச்சில் வெறும் 105 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 27 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக தவால் குல்கர்ணி, சம்ஸ் முலானி, தானுஷ் கோட்டியன் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

அதன் பின் 119 ரன்கள் வலுவான முன்னிலையுடன் களமிறங்கிய மும்பை 2வது இன்னிங்க்ஸில் 418 ரன்கள் குவித்தது. மும்பைக்கு அதிகபட்சமாக முசீர்கான் சதமடித்து 136, கேப்டன் ரகானே 73, ஸ்ரேயாஸ் ஐயர் 95, சாம்ஸ் முலானி 50* ரன்கள் எடுத்த நிலையில் விதர்பா சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷ் துபே 5 விக்கெட்டுகளை சாய்த்தார். இறுதியில் 528 என்ற மெகா இலக்கை துரத்திய விதர்பா முழு மூச்சுடன் முடிந்தளவுக்கு போராடியும் 368 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

அந்த அணிக்கு அதர்வா டைட் 32, துருவ் சொரே 28, அமன் மோகன்டே 32, யாஷ் ரத்தோட் 7 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் மிடில் ஆர்டரில் கருண் நாயர் 74, கேப்டன் அக்சய் வட்கர் சதமடித்து 102, ஹர்ஷ் துபே 65 ரன்கள் எடுத்துப் போராடியும் விதர்பா அணியால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. மும்பை சார்பில் அதிகபட்சமாக தானுஷ் கோட்டியன் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

இதையும் படிங்க: என்னடா இது சோதனை.. ஷ்ரேயாஸ் ஐயரும் ஐ.பி.எல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளில் – விளையாடுவது சந்தேகம்

அதன் காரணமாக 169 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற மும்பை அஜிங்க்ய ரகானே தலைமையில் வரலாற்றில் 42வது முறையாக ரஞ்சிக் கோப்பையை ஏணி வைத்தாலும் தொட முடியாத சாதனை படைத்துள்ளது. ஏனெனில் மும்பைக்கு அடுத்தபடியாக கர்நாடகா வெறும் 8 கோப்பைகளை மட்டுமே வென்றுள்ளது. மேலும் இப்போட்டியுடன் உள்ளூர் கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்ற நட்சத்திர மூத்த வீரர் தவால் குல்கர்னி கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் கண்கலங்கி உருக்கத்துடன் பிரியமானதுடன் விடை பெற்றார். அவருக்கு மும்பை வாரியம் சார்பில் ஸ்பெஷல் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது.

Advertisement