இந்தியாவில் 2024 சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதனுடைய மாபெரும் இறுதிப்போட்டி டிசம்பர் 15ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய மும்பை மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோதின.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய மத்திய பிரதேசத்திற்கு அர்பிட் கௌட் 3, ஹர்ஷ் கௌலி 2 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அடுத்து வந்த ஹர்ப்ரீத் சிங் 15, சேனாதிபதி 23 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.
படிதார் போராட்டம் வீண்:
அதனால் 54-4 என தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் கேப்டன் ரஜத் படிதார் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். ஆனால் எதிர்ப்புறம் அவருக்கு கை கொடுக்க முயற்சித்த வெங்கடேஷ் ஐயர் 17, ராகுல் பதம் 19 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்கள். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து தனி ஒருவனாக போராடிய ரஜத் படிதார் 6 பவுண்டரி 6 சிக்ஸருடன் 81* (40) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.
அவருடைய அதிரடியால் 20 ஓவரில் மத்திய பிரதேசம் 174-8 ரன்கள் குவித்தது. இதன் வாயிலாக சயீத் முஷ்டாக் அலி கோப்பையின் இறுதிப்போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த கேப்டன் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன் 2019 ஃபைனலில் மனிஷ் பாண்டே 60 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனை. மும்பைக்கு அதிகபட்சமாக சர்துள் தாகூர் 2, ராய்ஸ்டன் தியாஸ் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள்.
மும்பை சாம்பியன்:
பின்னர் 175 ரன்களை துரத்திய மும்பைக்கு பிரிதிவி ஷா 10, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 16 ரன்களில் அவுட்டானாலும் ரஹானே 37 (30) ரன்கள் குவித்து பெவிலியன் சென்றார். அடுத்து வந்த சிவம் துபே 9 ரன்னில் அவுட்டானார். ஆனால் இந்திய அணியின் கேப்டன் மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் அதிரடியாக 4 பவுண்டரி 3 சிக்சருடன் 48 (35) ரன்கள் விளாசி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.
இதையும் படிங்க: என்ன ஒரு முட்டாள்தனம்.. டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக.. சிராஜின் பவுலிங்கை விளாசிய சைமன் கேட்டிச்
ஆனால் அடுத்து வந்த அதர்வா அன்கோலேகர் 16* (6) ரன்களும் சுயன்ஸ் செட்ஜ் 36* (15) ரன்களும் விளாசி அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தார்கள். அதனால் 17.5 ஓவரிலேயே 180-5 ரன்கள் எடுத்த மும்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2024 சயீத் முஷ்டாக் அலி கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதையும் சேர்த்து இந்தியாவில் நடைபெற்ற உள்ளூர் தொடர்களில் 63வது சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை சாதனை படைத்தது. மறுபுறம் ட்ரிபேஷ் சிங் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகள் எடுத்தும் மத்திய பிரதேசம் தோற்றது.



