
நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான 19-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது நேற்று மார்ச் 28-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் துவங்கியது. இந்த முதல் போட்டியில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து இன்று இந்த ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியானது நடைபெற உள்ளது.
அந்த வகையில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் இந்த இரண்டாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன. பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வேளையில் தற்போது இவ்விரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்னும் ஒரு சில மணி நேரங்களில் துவங்க இருக்கும் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற வேண்டும் என அந்த அணியின் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஏனெனில் ஐபிஎல் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது கடந்த 13 ஆண்டுகளாக தாங்கள் விளையாடும் சீசனின் முதல் போட்டியில் வெற்றிபெற முடியாமல் தோல்வியையே சந்தித்து வருகிறது.
மொத்தம் 18 ஆண்டுகள் நடைபெற்றுள்ள ஐபிஎல் போட்டிகளில் 14 முறை மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்த மோசமான சாபத்திலிருந்து வெளிவரும் வகையில் இன்றைய போட்டியிலாவது மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறுமா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றில் மேலும் ஒரு இமாலய சாதனையை நிகழ்த்தி கிங் என்பதை நிரூபித்த – விராட் கோலி
மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே இதுவரை நடைபெற்றுள்ள 35 போட்டிகளில் 24 முறை மும்பை அணி வெற்றி பெற்றுள்ளதால் இம்முறை நிச்சயம் முதல் போட்டியில் வெற்றி பெற்று அந்த 13 ஆண்டு கால சோகத்தை மாற்றும் என்றும் சிலர் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.